தானிய ஈட்டு கடன் தொகை உடனடியாக வழங்க உத்தரவு
செங்கல்பட்டு:தானிய ஈட்டு கடன்கள் அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க, கூட்டுறவு கடன் சங்க செயலர்களுக்கு, கூட்டுறவுச்சங்களின் மாநில பதிவாளர் சுப்பையன் உத்தரவிட்டார்.செங்கல்பட்டு மாவட்டம், பெருங்களத்துாரில் உள்ள வணிக வளாகத்தில், கூட்டுறவு பல்பொருள் அங்காடி அமைய உள்ள இடம் மற்றும் ஊரப்பாக்கம் ரேஷன் கடை அருகில் பசுமை உழவர் சந்தை இடங்களை, கூட்டுறவு சங்கங்களின் மாநில பதிவாளர் சுப்பையன், நேற்று ஆய்வு செய்தார்.அதன்பின், ஊரப்பாக்கம் ரேஷன் கடை, மதுராந்தகம் அடுத்த எம்.பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், தானிய ஈட்டு கிடங்கு ஆகியற்றை ஆய்வு செய்தார்.ஆய்வுக்குபின், தானிய ஈட்டு கடனை, அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க, கடன் சங்க செயலர்களுக்கு உத்தரவிட்டார். இதேபோல், சோத்துப்பாக்கத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், மாற்றுத்திறனாளி உறுப்பினர்கள் இருவருக்கு, தலா 50,000 ரூபாய், ஆறு மகளிர் சுய உதவிக்குழுக்கு, 35 லட்சம் ரூபாய் கடன்களை, கூட்டுறவு சங்களின் மாநில பதிவாளர் சுப்பையன் வழங்கினார்.மண்டல இணைப்பதிவாளர் நந்தகுமார், துணை பதிவாளர் சற்குணன், சரக துணை பதிவாளர் உமாசங்கரி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.