சிங்கபெருமாள்கோவில் காவல் நிலையம் என்னாச்சு இரு ஆண்டுகளாக கிடப்பில் போட்டதால் அதிருப்தி
சிங்கபெருமாள் கோவில்:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், சிங்கபெருமாள்கோவில் ஊராட்சியில் சிங்கபெருமாள்கோவில், திருத்தேரி, பாரேரி, விஞ்சியம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.இங்கு 20,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், வணிக கட்டடங்கள் உள்ளன. சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் அடிப்படை தேவைகளுக்கு தினமும் இங்கு வந்து செல்கின்றனர்.ஒரகடம், மகேந்திரா சிட்டி, மறைமலைநகர் சிப்காட் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்து வருவோர், இங்கு வாடகைக்கு வசித்து வருகின்றனர்.இந்த பகுதி மக்கள் குற்றம் மற்றும் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளுக்கு 7 கி.மீ., தொலைவில் உள்ள மறைமலைநகர் காவல் நிலையத்தில் சென்று புகார் அளிக்கும் நிலை உள்ளது.கடந்த காலங்களில் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் வெட்டி படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.எனவே, மறைமலைநகர் காவல் நிலையத்தை பிரித்து, இந்த பகுதியில் புதிதாக காவல் நிலையம் அமைக்க வேண்டும் என, பொது மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் நீண்ட நாட்களாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.இதையடுத்து கடந்த 2023ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி, புதிய காவல் நிலையம் அமைக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.உத்தரவு வெளியாகி இரண்டு ஆண்டுகள் முழுமையாக நிறைவடைந்தும், இதுவரை இந்த பகுதியில் காவல் நிலையம் அமைக்கப்படாமல் உள்ளது.இதன் காரணமாக கஞ்சா விற்பனை, மொபைல்போன் பறிப்பு, பைக், கார் போன்ற வாகனங்கள் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:செங்கல்பட்டு புறநகர் பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களில், கொரோனா காலத்திற்குப் பின் கஞ்சா புழக்கம் அதிகரித்து உள்ளது. அதன் தொடர்ச்சியாக திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.அதே போல சிங்கபெருமாள்கோவில், திருக்கச்சூர், அனுமந்தபுரம் உள்ளிட்ட கிராமங்கள் ஆன்மிக தலங்கள் என்பதால், விசேஷ நாட்களில் போலீசாருக்கு கூடுதல் சிரமம் ஏற்பட்டு வருகிறது.சிங்கபெருமாள்கோவில் காவல் நிலையம் அறிவிப்புக்குப் பின் அறிவிக்கப்பட்ட திருமுடிவாக்கம், மேடவாக்கம், படப்பை, கிளாம்பாக்கம் உள்ளிட்ட காவல் நிலையங்கள் பயன்பாட்டிற்கு வந்த நிலையில், இந்த காவல் நிலையம் வெறும் அறிவிப்பு நிலையிலேயே உள்ளது.எனவே, விரைவில் காவல் நிலையம் அமைக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.புதிய காவல் நிலைய அறிவிப்பு வந்த போது, இந்த பகுதியில் நடைபெற்று வந்த குற்ற சம்பவங்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல் போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படும் என எண்ணினோம். ஆனால், இதுவரை காவல் நிலையம் அமைக்கப்படாமல் இருப்பது மேலும் குற்றச் சம்பவங்கள் நடைபெற வழிவகுக்கும். எனவே, புதிய காவல் நிலையம் அமைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எஸ்.அசோக், தனியார் நிறுவன ஊழியர், சிங்கபெருமாள் கோவில்.
இடம் தேர்வில் தாமதம்
புதிய காவல் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்வதில் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. ஆனால், சிங்கபெருமாள்கோவில் ஊராட்சியில் 5க்கும் மேற்பட்ட அரசு கட்டடங்கள் நல்ல நிலையில் இருந்து, பயன்பாடு இல்லாமல் பூட்டி வைக்கப்பட்டு உள்ளன. திருக்கச்சூர் சாலையில் உள்ள மகளிர் சுய உதவிக்குழு கட்டடம் பெயரளவிற்கு திறந்து வைக்கப்பட்டு உள்ளது. இதுபோன்ற கட்டடங்களில் தற்காலிகமாக காவல் நிலையம் அமைத்து விட்டு, அதன் பிறகு சொந்த கட்டடம் கட்ட இடம் தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்கலாம் என, பொதுமக்கள் கூறுகின்றனர்.
பணி ஒதுக்கீடு
இன்ஸ்பெக்டர் ஒருவர், சப் -- இன்ஸ்பெக்டர்கள் இரண்டு பேர், தலைமை போலீஸ்காரர் இரண்டு பேர், முதுநிலை போலீசார் ஒன்பது பேர், போலீசார் 17 பேர் என, 31 பேர் சிங்கபெருமாள்கோவில் காவல் நிலையத்தில் பணிபுரிவர் என, அப்போது அறிவிக்கப்பட்டது.
காவல் நிலையத்தில் இணைக்கும் பகுதிகள்
சிங்கபெருமாள் கோவில், விஞ்சியம்பாக்கம், திருத்தேரி, பாரேரி, பகத்சிங் நகர், செட்டிபுண்ணியம், அனுமந்தபுரம், கொண்டமங்கலம், திருக்கச்சூர் உள்ளிட்ட பகுதிகள்.செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்திற்கு உட்பட்ட தென்மேல்பாக்கம், வீராபுரம், அஞ்சூர் உள்ளிட்ட பகுதிகள். பாலுார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட தெள்ளிமேடு, ஆப்பூர், சேந்தமங்கலம் கிராமங்கள் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.