உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மழை நீர் வடிகால்வாயை ஆக்கிரமித்து வீடுகள் அகற்ற மறுத்து தி.மு.க., கவுன்சிலர் அடாவடி

மழை நீர் வடிகால்வாயை ஆக்கிரமித்து வீடுகள் அகற்ற மறுத்து தி.மு.க., கவுன்சிலர் அடாவடி

கூடுவாஞ்சேரி,:கூடுவாஞ்சேரி மீனாட்சி நகரில், கூடுவாஞ்சேரி பெரிய ஏரியின் அருகில், புல எண் 129சி யில் உள்ள மழை நீர் வடிகால்வாயை ஆக்கிரமித்து, அதில் தி.மு.க., பிரமுகர் வசித்து வருவதோடு, வீடுகளை கட்டி வாடகைக்கு விட்டு வசூலித்து வருகிறார்.சமீபத்தில் பெய்த மழை மற்றும் புயலால், இப்பகுதியில் மழைநீர் சீராக செல்லாமல், ராதாகிருஷ்ணன் தெரு, மீனாட்சி நகர், செல்லப்பா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து, இப்பகுதிவாசிகள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் சிரமம் அடைந்தனர்.இதுகுறித்து, அப்பகுதி குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகி தினேஷ் சக்கரவர்த்தி கூறியதாவது:கூடுவாஞ்சேரி ஏரி பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ளது. இந்த ஏரிக்கு, வல்லாஞ்சேரி ஏரியின் உபரி நீர் மற்றும் மழை நீர் வடிகால்வாய் வாயிலாக, ஜி.எஸ்.டி., சாலையை கடந்து, மழை நீர் நீர் வருகிறது.நீர் வரும் பாதை மற்றும் மழை நீர் வடிகால்வாயை ஆக்கிரமித்து, 30 ஆண்டுகளுக்கும் மேலாக, அப்பகுதியை சேர்ந்த, 26வது வார்டு தி.மு.க., பெண் கவுன்சிலர் பரிமளா மற்றும் அவரது கணவர் டிஸ்கோ கணேசன் வசித்து வருகின்ரனர்.மேலும், அதிக அளவிலான வீடுகள் கட்டி, வாடகைக்கு விட்டும் வசூலித்து வருகின்றனர். இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள், மாவட்ட நிர்வாகத்திற்கும், பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும் புகார் மனு அளித்தனர்.அதன் அடிப்படையில், ஆக்கிரமிப்புகளை அகற்ற ஜே,சி.பி., இயந்திரங்களுடன், மாவட்ட நிர்வாகம் சார்பில், பொதுப்பணி மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு வந்தனர்.அப்போது, தி.மு.க., பிரமுகர் கால அவகாசம் கேட்டதால், மாவட்ட நிர்வாகம் கால அவகாசம் கொடுத்தது. ஆனால், கால அவகாசம் முடிந்து ஓராண்டாகியும், இதுவரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை.தற்போது வரும் மழைக்காலத்தை கருத்தில்கொண்டு, மழைநீர் வடிகால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்ற, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை