டேங்கரில் மினி லாரி மோதி டிரைவர் பலி
மறைமலைநகர்:திருச்சியில் இருந்து சென்னை கோயம்பேடு சந்தைக்கு வாழைப்பழம் லோடு ஏற்றிக்கொண்டு,'டாடா மினி' லாரி, நேற்று அதிகாலை 4:30 மணியளவில், ஜி.எஸ்.டி., சாலையில் சென்றது. மினி லாரியை திருச்சி மாவட்டம், முசிறி பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்,35, என்பவர் ஓட்டினார்.மறைமலைநகர் அடுத்த பொத்தேரி பேருந்து நிறுத்தம் அருகில் வந்த போது, சாலை ஓரம் நிறுத்தப்பட்டு இருந்த 'டேங்கர்' லாரியின் பின்புறத்தில், மினி லாரி மோதியது.இதில் படுகாயமடைந்த ராஜேஷை அங்கிருந்தோர் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக, பொத்தேரி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.அங்கு அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், டேங்கர் லாரி ஓட்டுனரான கடலுார் மாவட்டம், புவனகிரி பகுதியைச் சேர்ந்த குமரேசன்,31, என்பவரிடம் விசாரித்து வருகின்றனர்.