இ.சி.ஆர்., சாலையில் சரிந்து விழுந்த விளம்பர பலகையால் விபத்து அபாயம்
மாமல்லபுரம்,:வடநெம்மேலி கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் விழுந்த விளம்பர பலகை அகற்றப்படாததால், இருசக்கர வாகன பயணியர் விபத்து அபாயத்துடன் செல்கின்றனர்.கடலோர பகுதியை துாய்மையாக பராமரிப்பது, இப்பகுதி விழிப்புணர்வு நடைமுறைகளை பின்பற்றுவது ஆகியவற்றை வலியுறுத்தி, தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை சார்பில், இரண்டு ஆண்டுகளுக்கு முன், விளம்பர பலகைகள் அமைக்கப்பட்டன.மாமல்லபுரம், மரகத பூங்கா, சாலவான்குப்பம், வடநெம்மேலி கிழக்கு கடற்கரை சாலை ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டது. வடநெம்மேலி, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மாமல்லபுரம் தடத்தில் விளம்பர பலகை, சில நாட்கள் முன் சரிந்து, சாலையில் விழுந்தது.அப்போது, சாலையில் யாரும் கடக்காததால், அசம்பாவிதம் ஏற்படவில்லை. இந்த பலகையை தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவன ஊழியர்கள், சாலையோரம் சாய்த்து வைத்துள்ளனர்.இருசக்கர வாகன ஓட்டிகள், வாகனங்களுக்கு வழிவிட ஒதுங்கும் போது, விளம்பர பலகையில் மோதி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, பயணியர் நலன் கருதி, விளம்பர பதாகையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.