| ADDED : நவ 27, 2025 04:26 AM
சென்னை: மாடு முட்டி காயமடைந்தவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை, மாதவரம் அடுத்த மாத்துார் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் ஆனந்த் சைன், 79. இவர், அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு பால் வினியோகித்து வந்தார். இவர், கடந்த 14ம் தேதி சைக்கிளில் பால் போடும் பணியில் இருந்தார். மாத்துார் பிரதான சாலையில் சென்றபோது, ஒரு பசு மாடு, குதிரையுடன் உணவிற்காக தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருந்துள்ளது. திடீரென மிரண்டு ஓடிய பசு மாடு முதியவர் ஆனந்த் சைன் மீது மோதியது. இதில் கீழே விழுந்த முதியவர் பலத்த காயமடைந்தார். அங்கிருந்தோர் அவரை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி, முதியவர் நேற்று முன்தினம் மரணடைந்தார். இது குறித்து மாதவரம் பால் பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர். சாலையில் உலா வரும் மாடு உள்ளிட்ட கால்நடைகள் மற்றும் அதன் உரிமையாளர் மீது, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இருப்பதே இந்த உயிர்பலி சம்பவத்திற்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.