சென்னை:சென்னை, ராயப்பேட்டையில் அமைந்துள்ளது ரத்தின விநாயகர், துர்க்கையம்மன் கோவில். இந்த கோவிலுக்கு, ஒயிட்ஸ் சாலை 2வது லேனில், பக்தர்களால் மூன்று கிரவுண்டு இடம் எழுதி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.அந்த இடம், தற்போது ஆக்கிரமிப்பாளர்கள் கையில் சிக்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. அதேபோல, பல ஆண்டுகளாக அந்த இடத்திற்கு செலுத்த வேண்டிய பல கோடி ரூபாயும் செலுத்தப்படவில்லை எனவும் தெரிய வருகிறது.இது தொடர்பாக, அறநிலையத்துறை சென்னை இணைக் கமிஷனருக்கு பக்தர்கள் தரப்பில் அளிக்கப்பட்டுள்ள புகார் மனு:ராயப்பேட்டை விநாயகர், துர்க்கை அம்மன் கோவிலுக்கு சொந்தமான மூன்று கிரவுண்டு இடம், துரைராஜ் என்பவருக்கு பல ஆண்டுகளுக்கு முன் ஒதுக்கப்பட்டது. அவரிடம் இருந்து, சன்னி ராஜ் என்பவர் அபகரித்துள்ளார்.அந்த இடத்தில் சட்ட விரோதமாக கட்டடங்கள் கட்டி, மாதம் 19 லட்சம் ரூபாய் வாடகை பெற்று வருகிறார். சன்னி ராஜிற்கு பின், அவரது மகன் வினோத் என்பவர் அனுபவித்து வருகிறார். அந்த இடத்தில் இருந்து கோவிலுக்கு வரவேண்டிய வருமானம், பல கோடி ரூபாயில் 1 ரூபாய் கூட இன்று வரை வரவில்லை. கோவில் இடத்தை ஆக்கிரமித்து சம்பாதித்த பணத்தில், ஆக்கிரமிப்பாளர் சென்னையில் பல இடங்களை பல கோடி ரூபாய்க்கு வாங்கி போட்டுள்ளனர்.இது தொடர்பாக, பல ஆண்டுகளாக புகார் அளித்தும் அறநிலையத்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்களை பொறுத்தவரை, கோவிலுக்கு சொந்தமான இடத்தில் இருந்து வரும் வருமானம், கோவிலுக்கு தான் செலவு செய்ய வேண்டும்.எனவே, விநாயகர் கோவிலுக்கு வர வேண்டிய தொகையை, முழுமையாக வசூலிக்க வேண்டும். கோவில் இடத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டு, கோவில் பெயரில் சுவாதீனம் செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.'புகார் மனுவை பெற்ற, இணைக் கமிஷனர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என கூறியுள்ளார்.இந்த புகார் மனு, அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் கமிஷனருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.