பூஞ்சேரி குறுகிய பெட்டி பாலம் நெருக்கடி தவிர்க்க விரிவாக்கம்
மாமல்லபுரம்:மாமல்லபுரம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை, நான்கு வழிப்பாதையாக மேம்படுத்தப்படுகிறது. பிற சாலைகள், தேசிய நெடுஞ்சாலையில் இணையும் சந்திப்பு பகுதிகளில், தொலைதுார வாகனங்கள் போக்குவரத்து இடையூறின்றி கடக்க, மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.மாமல்லபுரம் பூஞ்சேரி பகுதியில், முந்தைய சந்திப்பிற்கு சற்று வடக்கில், சென்னை, புதுச்சேரி தட வாகனங்கள் கடக்க, தனி மேம்பாலம் அமைக்கப்படுகிறது.செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகள் செல்லும் வாகனங்கள், முந்தைய சந்திப்பு வழியே செல்வதை தவிர்த்து, சற்று தெற்கில் மேம்பாலத்தில் செல்லும் வகையில், ரவுண்டானா மேம்பாலம் அமைக்கப்படுகிறது.இரண்டு மேம்பாலங்கள் இடையே உள்ள முந்தைய சந்திப்பில், அங்குள்ள வசந்தபுரி, அம்பாள் நகர் பகுதியினர் கடந்து செல்வதற்காக, பெட்டிப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.பெட்டிப் பாலத்தின் கீழ், இருசக்கர வாகனங்கள், கார் ஆகியவை செல்வதற்காக, குறுகிய அகலத்தில் அமைக்கப்பட்டது. மேம்பால கட்டுமான பணிகள் நடப்பதால், செங்கல்பட்டு நோக்கி செல்லும் வாகனங்கள், வழக்கம்போல் முந்தைய சந்திப்பு பெட்டிப் பாலத்தின் கீழே தான் செல்கின்றன.பாலத்தின்கீழ் குறுகிய இடமே உள்ளதால், எதிரெதிர் திசைகளில் வாகனங்கள் செல்ல இயலவில்லை. கனரக டாரஸ் லாரிகள் ஏராளமாக செல்வதால், போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.இதையடுத்து, பெட்டிப் பாலத்தை விரிவுபடுத்த முடிவெடுத்த நெடுஞ்சாலை துறை, அதை ஒட்டியே, புதிய பாலம் அமைக்கும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.