பழுதான நீர்த்தேக்க தொட்டி இடித்து புதிதாக கட்ட எதிர்பார்ப்பு
சித்தாமூர்: சித்தாமூர் ஊராட்சியில், பழுதடைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றி, புதிய தொட்டி அமைக்க வேண்டுமென, கிராமத்தினர் எதிர்பார்க்கின்றனர். சித்தாமூர் ஊராட்சியில், 600க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஊராட்சி மன்ற அலுவலகத்தின் பின்புறம், 25 ஆண்டுகளுக்கு முன், 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. அத்துடன், குடிநீர் கிணறு அமைத்து, அதிலிருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றி, கிராமத்தினருக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது, இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் துாண்கள் சேதமடைந்து, அதில் இருந்த சிமென்ட் கலவை உதிர்ந்து உள்ளது. மேலும், தொட்டியின் மேல்தளம் இடிந்து தொட்டியில் விழுந்து, இரும்புத் துகள்கள் கலந்த தண்ணீர் வினியோகம் செய்யப்படுவதாக, கிராமத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து, சித்தாமூர் கிராமத்தினர் கூறியதாவது: பலத்த காற்று வீசினால், இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழுந்து, விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, முன்னெச்சரிக்கையாக, பழுதடைந்துள்ள இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அப்புறப்படுத்தி விட்டு, அதே இடத்தில் புதிய தொட்டி கட்ட, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.