சிங்கபெருமாள் கோவில் ரயில்வே மேம்பாலம் தாம்பரம் மார்க்க பாதையை திறக்க எதிர்பார்ப்பு
சிங்கபெருமாள் கோவில்:சிங்கபெருமாள் கோவில் ரயில்வே மேம்பால பணிகள், கடந்த 15 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது 80 சதவீத பணிகள் நிறைவடைந்து உள்ளதால், தாம்பரம் மார்க்க மேம்பாலத்தை பொங்கலுக்கு முன் திறக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.செங்கை புறநகர் பகுதிகளில் வளர்ந்து வரும் முக்கிய நகரம், சிங்கப்பெருமாள் கோவில். சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இங்கு வந்து செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வருகின்றனர்.இங்கு சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் சாலையிலுள்ள ரயில்வே கேட் வழியாக, தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம் பகுதியிலுள்ள தொழிற்சாலைகளுக்கு சென்று வருகின்றன.இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, கடந்த தி.மு.க., ஆட்சியில் 2008ம் ஆண்டு, ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டன.கடந்த 2011ம் ஆண்டு ஆட்சி மாற்றம், ஜி.எஸ்.டி., சாலை எட்டு வழிச்சாலையாக விரிவாக்கம், ரவுண்டானா அமைப்பதில் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிகள் கிடப்பில் போடப்பட்டன.மீண்டும், 2021ல் தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின், மீண்டும் புதிதாக 'டெண்டர்' விடப்பட்டு, 138.27 கோடி மதிப்பில், 2021 நவம்பரில் பூமி பூஜை போடப்பட்டு பணிகள் துவங்கின. அத்துடன், 30 மாதங்களில் அனைத்து பணிகளையும் முடிக்க உத்தரவிடப்பட்டது. மேம்பாலம் அமைய உள்ள ஜி.எஸ்.டி., சாலையோரம் கட்டடங்கள், மின் கம்பங்கள், பாலாற்று குடிநீர் குழாய்கள் மாற்றியமைப்பட்டு, இருபுறமும் மழைநீர் வடிகால், அணுகு சாலை உள்ளிட்டவை அமைக்கப்பட்டன.இதற்கிடையில், தாம்பரம் மார்க்கத்தில் மேம்பாலத்தின் துாண் அமைய இருந்த இடத்தில், பூமிக்கு அடியில் கிணறு இருந்தது. இதனால் பணிகள் தடைபட்டன. பின், பொறியியல் வல்லுனர்களின் திட்ட அனுமதி பெற்று, அதன்படி துாண்கள் அமைக்கப்பட்டன.தற்போது, தாம்பரம் மார்க்கத்தில் மேம்பால பணிகள் நிறைவடைந்து உள்ளன. இந்நிலையில், பொங்கல் தொடர் விடுமுறை காலங்களில், இந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, நெரிசலை தடுக்க தாம்பரம் மார்க்கத்தில் மேம்பாலத்தை போக்குவரத்திற்கு திறக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.இதுகுறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:இந்த ரயில்வே கேட் ஒவ்வொரு முறை மூடும் போதும், 20 முதல்- 30 நிமிடங்கள் வரை, வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். ஆம்புலன்ஸ்கள் கூட செல்ல முடியவில்லை. கடந்தாண்டு திருக்கச்சூர் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, மருத்துவமனை அழைத்துச் சென்ற போது, ரயில்வே கேட் மூடப்பட்டு இருந்தது. உறவினர்கள் அவரை துாக்கிச் சென்றபோது, அவர் உயிரிழந்தார். பள்ளி மாணவர்கள், பணிக்குச் செல்வோரும் சரியான நேரத்திற்கு செல்ல முடியவில்லை. இந்த பகுதி போக்குவரத்து நெரிசல், ஜி.எஸ். டி.., சாலையில் 1 கி.மீ., துாரம் தொடர்ந்து செல்லும்.இந்த மாதம் பொங்கல் தொடர் விடுமுறைக்கு, கடும் நெரிசல் ஏற்படும். எனவே, இந்த பாலத்தை திறக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இதுகுறித்து, நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தாம்பரம் மார்க்கமான மேம்பாலத்திற்கு வண்ணம் பூசுதல், மின் கம்பங்கள், மின் விளக்குகள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பாலத்தின் மீது வாகனங்கள் செல்லும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. மொத்த மேம்பால பணிகளில் 80 சதவீத பணி முடிந்துள்ளது. அனைத்து பணிகளும் நிறைவடைந்து, ஏப்ரல் மாதத்திற்குள் மேம்பாலத்தை திறக்கும் வகையில் பணி நடைபெற்று வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.என் பள்ளி பருவத்தில் இந்த மேம்பால பணிகள் துவக்கப்பட்டன. இதுவரை பணிகள் நிறைவடைந்த பாடில்லை. பள்ளி, கல்லுாரி முடித்து, நான் பணிக்கும் சென்று விட்டேன். எப்போது இந்த பாலம் திறக்கப்படும் என, இப்பகுதி மக்களைப் போல நானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். - எஸ்.வசந்த், 30,சிங்கபெருமாள் கோவில்.