செங்கை புறநகரில் உரம் தட்டுப்பாடு கூடுதல் விலையால் விவசாயிகள் அவதி
மறைமலை நகர்:காட்டாங்கொளத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட கொண்டமங்கலம், பாலுார், வில்லியம்பாக்கம், சாஸ்திரம்பாக்கம், கருநிலம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில், விவசாயம் பிரதான தொழில். தற்போது ஆடிப் பட்டத்தில் நெல் விதைப்பதை விட காய்கறி செடிகள், பூச்செடி போன்ற தோட்டக்கலை பயிர்களை பயிரிட, விவசாயிகள் ஆர்வம் செலுத்துகின்றனர். ஆடிப் பட்டத்தில் நெற்பயிரை தவிர்த்து காய்கறி, பூச்செடிகளை பயிரிட காரணம் ஆவணி, புரட்டாசி மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், ஏரிகளில் போதிய தண்ணீர் இருக்காது. அதன் காரணமாக 'பம்ப் செட்' வைத்துள்ள விவசாயிகள், குறுகிய காலங்களில் மகசூல் தரக்கூடிய புடலங்காய், பாகற்க்காய், பீர்க்கங்காய், வெள்ளரிக்காய், வெண்டை உள்ளிட்டவற்றை பயிரிடுகின்றன். திம்மாவரம், ஆத்துார், வில்லியம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில், வாழை அதிக அளவில் பயிரிடப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக, அடி உரமான 'பாக்டம்பாஸ்' மற்றும் யூரியா போன்ற உரங்கள், இந்த பகுதியில் உள்ள தனியார் கடைகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் கிடைக்காததால், விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர். மருந்து கடைக்காரர்கள் முறைகேடு இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: கடந்த சில நாட்களாக காய்கறி செடிகள் மற்றும் நெற்பயிர்களுக்கு செலுத்தும் 'பாக்டம்பாஸ்', யூரியா போன்ற உரங்கள் செங்கல்பட்டு, சிங்கபெருமாள் கோவில், வில்லியம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் உரக்கடைகளில் கிடைப்பதில்லை. கூட்டுறவு சங்கங்களிலும் யூரியா இல்லை எனக் கூறுகின்றனர். இதன் காரணமாக, இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் காஞ்சிபுரம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், சாலவாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று, தனியார் கடைகளில் வாங்கி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், விற்பனை விலைகளிலும் ஒவ்வொரு கடையிலும் மாற்றம் உள்ளது. அனைத்து விதமான மருந்துகளிலும் 100 முதல் -150 ரூபாய் வரை கூடுதலாக விற்கப்படுகிறது. உர மானியத்திக்கு கொடுக்கப்படும் ஆதார் எண்ணை, சில கடைக்காரர்கள் தவறாக பயன்படுத்துகின்றனர். 'பாக்டம்பாஸ்' உள்ளிட்ட மருந்துகளை விவசாயிகள் வாங்கும் முன்பே, வாங்கியதாக குறுஞ்செய்தி வருகிறது. எனவே, தட்டுப்பாடு இல்லாமல் உரம் கிடைக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.