குழந்தைகள் நல அலுவலகத்தில் ரகளை செய்த தந்தைக்கு காப்பு
செங்கல்பட்டு,செங்கல்பட்டு நகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், இரண்டரை வயது குழந்தையை அவரது தந்தை அடித்து துன்புறுத்துவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவுவதாக, குழந்தைகள் பாதுகாப்பு எண் 1098க்கு, கடந்த 2ம் தேதி ஒருவர் புகார் அளித்தார்.இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகள், போலீசாருடன் சென்று குழந்தையை மீட்டு, விசாரணைக்குப் பின் குழந்தையை காப்பகத்தில் சேர்த்தனர்.விசாரணையில், குழந்தையின் பெற்றோர் காதல் திருமணம் செய்து வாழ்ந்து வந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து உள்ளனர்.தற்போது தந்தையின் கட்டுப்பாட்டில் இருந்த குழந்தையை, அவர் தாக்கி வீடியோ எடுத்தது தெரிந்தது.இதையடுத்து, மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் அளித்த புகாரின்படி, செங்கல்பட்டு நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, குழந்தையின் தந்தை கார்த்திக்,30, என்பவரை தேடி வந்தனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை கார்த்திக், மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்திற்குள் மதுபோதையில் புகுந்து, தன் குழந்தையைக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அங்கிருந்த பீரோ, கம்ப்யூட்டர் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தி உள்ளார்.தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு நகர போலீசார், கார்த்திக்கை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்ற போது, தான் விஷம் அருந்தியதாக கூறியுள்ளார்.உடனே அவரை, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்து, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கார்த்திக் மீது, குழந்தைகள் நல அலுவலர் அளித்த புகாரின்படி, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.