செய்யூரில் பாதுகாப்பு உபகரணங்களின்றி தொழிலாளர்கள் பணிபுரிவதால் அச்சம்
செய்யூர், கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள், போதிய பாதுகாப்பு உபகரணங்களின்றி வேலை செய்து வருவதால், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை -- புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை வழியாக, புதுச்சேரி மற்றும் கடலோர மாவட்டங்களுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இந்நிலையில், மாமல்லபுரம் - புதுச்சேரி இடையிலான கிழக்கு கடற்கரை சாலையை, நான்கு வழியாக விரிவாக்கம் செய்ய, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவெடுத்தது. இதற்காக, 1,270 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன் தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் அளிக்கப்பட்டது. தற்போது, சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக, பல இடங்களில் மாற்றுப்பாதைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில், செய்யூரில் பணிகள் நடந்து வரும் இடங்களில் தொழிலாளர்கள் தலைக்கவசம், ஷூ, கையுறை போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணி செய்து வருகின்றனர். ஒப்பந்த நிறுவனம், பாதுகாப்பு விதிமுறைகளை முழுமையாக பின்பற்றாதது, இதிலிருந்து தெளிவாகிறது. இதனால், தொழிலாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, கட்டுமானப் பணிகள் நடக்கும் இடங்களில் ஆய்வு செய்து, தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.