ரூ.338 கோடியில் 4 மாவட்டங்களில் வெள்ள மேலாண்மை பணி துவக்கம்
செங்கல்பட்டு செங்கல்பட்டு, சென் னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில், 338 கோடி ரூபாயில் வெள்ள பாதிப்பை தடுக்கும் மேலாண்மை பணிகளை, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று துவக்கி வைத்தார்.ஓ.எம்.ஆர்., ஒக்கியம்மடுவில் பணிகளை துவக்கி வைத்த பின், துரைமுருகன் பேசியதாவது:சென்னை மாநகரம் விரிவடைவதால், மக்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன், இவ்வவளவு பெரிய வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் தேவைப்படவில்லை. இன்று நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அதிகரித்து, நீர்வழி பாதைகளை மறைத்து, வேறு திசைகளில் திருப்பி விடப்பட்டுள்ளன. இதனால், மழைக்காலங்களில் சென்னையில் மிகப்பெரிய பிரச்னை ஏற்படுகிறது.இதன் காரணமாக, தடுப்பு நடவடிக்கைக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில், 81 கோடி ரூபாயில் மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. இந்த ஆண்டு, 35 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், 1,111 கோடி ரூபாயில், 55 நிரந்தர வெள்ள தடுப்பு பணிகளில், 42 பணிகள் முடிந்துள்ளன. இதனால் செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வெள்ளம் விரைந்து வடிந்துள்ளது.தொடர்ச்சியாக நான்கு மாவட்டங்களிலும், 12 வெள்ள மேலாண்மை பணிகளுக்கு, 338 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதில், ஒக்கியம்மடு மறுசீரமைப்பு, ஒரத்துார், மணிமங்கலம் இணை ஆறுகளில் விடுபட்ட பகுதிகளில் மூடு கால்வாய் அமைக்கப்படும். மணிமங்கலம் துணை நீர்வழித்தடங்கள் மறுசீரமைப்பு பணி, அவற்றில் நீர்த்தேக்கம் உருவாக்குவது, அம்பத்துார் ஏரியின் உபரிநீர் கால்வாயை கூவம் ஆற்றில் இணைக்கும் பணி நடைபெற உள்ளது. பணிகளை பருவமழைக்கு முன் விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்பேசினார்.இந்நிகழ்வில், சோழிங்கநல்லுார் தொகுதி எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ், நீர்வளத்துறை செயலர் ஜெயகாந்தன், தலைமை பொறியாளர் ஜானகி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.