உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஆப்பூர் சாலை பராமரிப்பு பணியில் சிக்கல் அனுமதி வழங்க இழுத்தடிக்கும் வனத்துறை

ஆப்பூர் சாலை பராமரிப்பு பணியில் சிக்கல் அனுமதி வழங்க இழுத்தடிக்கும் வனத்துறை

மறைமலை நகர்:மறைமலை நகர் - ஆப்பூர் சாலை, 7 கி.மீ., துாரம் உடையது. இந்த சாலையை, சட்டமங்கலம், பனங்கொட்டூர், திருக்கச்சூர் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.இந்த சாலை, சிங்கபெருமாள் கோவில்- - ஸ்ரீபெரும்புதுார் சாலையின் இணைப்பு சாலை. இந்த சாலையில், தினமும் ஆயிரக்கணக்கான இரு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள், தனியார் தொழிற்சாலை பேருந்துகள் சென்று வருகின்றன.மறைமலை நகர், காட்டாங்கொளத்துார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, ஒரகடம் பகுதிக்கு வேலைக்கு செல்வோர், இந்த சாலையை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.இந்த சாலையில், ஆப்பூர் - தாலிமங்கலம் இடையே, 200 மீட்டர் துாரம் இருபுறமும் காப்புக்காடுகள் உள்ளன. இதில் உள்ள சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து, சாலையின் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளன.இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:இந்த பகுதியில் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து, சாலை குறுகலானதால், வாகனங்கள் இந்த பகுதியை கடந்து செல்ல தாமதம் ஏற்பட்டு வருகிறது.ஒரு நேரத்தில், எதிர் எதிர் திசைகளில் வாகனங்கள் கடக்க முடியாததால், அடிக்கடி வாகன ஓட்டிகளிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.எனவே, இந்த பகுதியில் சாலையில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி, சாலை ஓரம் உள்ள பள்ளங்களை சீரமைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இது குறித்து, ஆப்பூர் ஊராட்சி நிர்வாகம் கூறியதாவது:சாலை ஓரம் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி, பள்ளங்களை சீரமைக்க முயலும் போது, வனத்துறை அதிகாரிகள் தடுக்கின்றனர். முறையாக அனுமதி கேட்டு, இரண்டு முறை கடிதம் அளிக்கப்பட்டு உள்ளது.வனத்துறை அதிகாரிகளிடமிருந்து உரிய பதில் கிடைப்பதில்லை. இதன் காரணமாக, மக்களிடையே அரசுக்கு அவப்பெயர் ஏற்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ