சென்னை: வேளச்சேரி தொகுதியில், 4,800 போலி ஓட்டுகள் உள்ளதாக, தொகுதியின் அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., அசோக் குற்றம் சாட்டினார். சென்னை மாவட்டத்தில் அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக, வேளச்சேரி உள்ளது. இங்கு, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி நடக்கிறது. இதில், ஒரே நபருக்கு, வெவ்வேறு பாகங்களில், 3, 4 ஓட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, வேளச்சேரி தொகுதி அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., அசோக் கூறியதாவது: வேளச்சேரி தொகுதியில் உள்ள, 261 பாகங்களில், 80க்கும் மேற்பட்ட பாகங்களில், 4,800 போலி ஓட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளன. தரமணியில் உள்ள வாக்காளருக்கு, திருவான்மியூர், வேளச்சேரியில் போலி ஓட்டுகள் உள்ளன. இது, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் வாயிலாக கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ஓட்டுகளை நீக்க வேண்டும் என, பட்டியலுடன் வேளச்சேரி தொகுதி தேர்தல் அதிகாரியிடம் மனு கொடுத்துள்ளேன். திருத்தம் வாயிலாக போலி ஓட்டுகளை நீக்க முடியும். அப்படி நீக்காவிட்டால் அ.தி.மு.க., சார்பில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.