இலவச வீட்டுமனை பட்டா பணிகள் செங்கை வருவாய் துறை சுறுசுறுப்பு
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் பணியில், வருவாய்த்துறை ஊழியர்கள், தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார், தாம்பரம், பல்லாவரம் ஆகிய தாலுகாக்கள் உள்ளன.இப்பகுதிகளில், ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில், ஆயிரக்கணக்கானோர் வீடு கட்டி வசிக்கின்றனர். இவர்கள் பட்டா வழங்க கோரி, கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர குறைதீர்வு கூட்டம், மனுநீதி நாள் முகாம்களில் பங்கேற்று இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி மனு அளித்து வருகின்றனர்.இம்மனுக்குள் மீது விசாரணை செய்து, கள ஆய்வு நடத்தி வருவாய்த் துறையினர் பட்டா வழங்கி வருகின்றனர். இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.இதனால், மாவட்டத்தில் எட்டு தாலுகாக்களில், 30,000க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதற்கான பணிகளில் வருவாய்த்துறை ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.தாலுகா அலுவலகங்களில் இருந்து பரிந்துரை செய்யும் மனுக்களை பரிசீலனை செய்து, இலவச பட்டா வழங்க தகுதியானவர்களை தேர்வு செய்யும் பணியில், மாவட்ட வருவாய்த் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.