மரங்களில் மின்கம்பிகள் உரசி அடிக்கடி மின்தடையால் அவதி
அச்சிறுபாக்கம்:எலப்பாக்கம், ஆணைக்குன்னம் கிராமங்களில், மின்கம்பிகள் மரங்களில் உரசி அடிக்கடி மின் துண்டிப்பு ஏற்படுவதால், பகுதிவாசிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் அடுத்த எலப்பாக்கம், ஆணைக்குன்னம் ஆகிய கிராமங்களுக்கு, ராமாபுரம் துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் செய்யப்படுகிறது.இதில், ஆணைக்குன்னம் கிராமத்தில், 450-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இப்பகுதியில், ஆழ்துளைக் கிணற்றில் மின் மோட்டார் அமைத்து, விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.மேலும், இப்பகுதியில் இரண்டு கல் குவாரிகள் செயல்படுவதால், மின் இணைப்புகளை இரண்டாகப் பிரித்துக் கொடுத்து உள்ளனர்.இதில், காலனி குடியிருப்பு மற்றும் கீழ் அத்திவாக்கம் செல்லும் சாலை பகுதியில், நாள்தோறும் அறிவிக்கப்படாத மின் தடை ஏற்படுகிறது.இதனால், வீட்டு உபயோக பொருட்களான பிரிஜ், வாஷிங் மிஷின், 'டிவி' உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் பழுதடைகின்றன.மேலும், இரவு நேரங்களில் மின்சாரம் துண்டிக்கப்படுவதால் குழந்தைகள், பெரியோர் என அனைவரும், துாக்கம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.இது குறித்து பலமுறை, துணைமின் நிலைய அதிகாரிகளுக்கு பகுதிவாசிகள் தகவல் தெரிவித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இப்பகுதிகளில், மின் கம்பிகள் செல்லும் தடத்தில், அதிக அளவில் மரங்கள் உள்ளன. இவற்றின் கிளைகள் மின் கம்பிகளில் உரசி, அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. மேலும், மின்சாதன பொருட்கள் பழுது காரணமாகவும் மின் தடை ஏற்படுகிறது. எனவே, தடையாக உள்ள மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தி, மின் தடை ஏற்படாத வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமத்தினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.