சாலையோரம் குப்பை குவிப்பு கடமலைப்புத்துாரில் சீர்கேடு
அச்சிறுபாக்கம், :அச்சிறுபாக்கம் அருகே திருச்சி- - சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில், கடமலைப்புத்துார் ஊராட்சி அமைந்துள்ளது.இந்த தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, புறவழிச்சாலையில் பிரிந்து ஒரத்தி வழியாக வந்தவாசி, காஞ்சிபுரம் செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது.கடமலைப்புத்துார் புறவழிச்சாலை ஓரம் கோழி இறைச்சி கழிவுகள், குப்பை கழிவுகள், ஹோட்டல் உணவுக் கழிவுகள் என, டன் கணக்கில் குப்பையை மர்ம நபர்கள் கொட்டி வருகின்றனர்.இதை சிலர், தீயிட்டு எரித்து விடுகின்றனர்.இதனால், அப்பகுதியை கடக்கும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மூச்சுத்திணறல் உள்ளிட்ட சுவாச பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.தற்போது, குப்பை கொட்டப்பட்டுள்ள பகுதியில் மழைநீர் தேங்கி நிற்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது.எனவே, மீண்டும் குப்பை கொட்டாதவாறு, புறவழிச் சாலை ஓரம் தடுப்பு வேலி அமைக்க வேண்டும்.தற்போது உள்ள கழிவுகளை முறையாக அகற்ற, தேசிய நெடுஞ்சாலை துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.