| ADDED : நவ 28, 2025 04:10 AM
மதுராந்தகம்: மதுராந்தகம் கிளியாற்றில் குப்பை கொட்டப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுராந்தகம், கருங்குழி, படாளம், செங்கல்பட்டு போன்ற பகுதிகளில் காய்கறி கடைகள், இறைச்சி கடைகள் மற்றும் உணவகங்கள் அதிக அளவில் செயல்பட்டு வருகின்றன. இந்த காய்கறி கடைகள், மீன் கடைகள் மற்றும் உணவகங்களின் கழிவுகள், இரவு நேரத்தில் வாகனங்களில் கொண்டு வரப்பட்டு, சென்னை -- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், மதுராந்தகம் ஏரியில் இருந்து உபரி நீர் செல்லும் கிளியாற்று பாலத்தின் மேல் இருந்து, ஆற்றில் கொட்டப்பட்டு வருகின்றன. செங்கல்பட்டு, படாளம், மதுராந்தகம் போன்ற பகுதியில் செயல்படும் காய்கறி கடைகளில் இருந்தும் காய்கறி கழிவுகளை மூட்டைகளில் கட்டி, லாரிகளில் கொண்டு வந்து இப்பகுதியில் கொட்டுவது தொடர்ந்து வருகிறது. இதனால், அப்பகுதியில் கடும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே, தேசிய நெடுஞ்சாலையில் இரவு ரோந்து செல்லும் போலீசார், இதுபோன்று குப்பை மற்றும் கழிவுகள் கொட்டும் வாகனங்களை கண்டறிந்து, அவர்களுக்கு அதிக அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.