சிப்காட் பகுதியில் சாலை ஆக்கிரமிப்பு அடாவடி வாகனங்களால் நெரிசல்
மறைமலை நகர்:மறைமலைநகர் சிப்காட் பகுதியில், 250க்கும் மேற்பட்ட வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற் சாலைகள் உள்ளன.இங்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து இளம்பெண்கள், ஆண்கள் வாடகைக்கு தங்கி, பணிபுரிந்து வருகின்றனர்.மேலும், சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கானோர் தொழிற்சாலைகளுக்கு வந்து செல்கின்றனர்.இந்த தொழிற்சாலைகளுக்கு இரு சக்கர வாகங்களில் பணிக்கு வருவோர், தங்களின் வாகனங்களை தொழிற்சாலை வளாகத்தில் நிறுத்தாமல், தொழிற்சாலை முன்பக்கம் சாலையை ஒட்டி காலியாக உள்ள இடத்தில் நிறுத்துகின்றனர்.இதனால், தொழிற்சாலைகளுக்கு உதிரிபாகங்கள் ஏற்றி வரும் கனரக வாகனங்கள், தொழிலாளர்களை ஏற்றி வரும் தனியார் பேருந்துகளை திருப்புவதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இதனால் விபத்து அபாயம் நிலவுவதால், தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:மறைமலை நகர் சிப்காட் பகுதி அமைக்கும் போதே, கனரக வாகனங்கள் வந்து செல்லும் வகையில் திட்டமிடப்பட்டு, பெரிய அளவிலான சாலைகள் அமைக்கப்பட்டன. தற்போது இச்சாலை, அதிக அளவில் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக, இங்குள்ள பெரும்பாலான தொழிற்சாலை நிர்வாகங்கள், ஹெல்மெட் அணியாமல் வரும் பணியாளர்களின் வாகனங்களை தொழிற்சாலை வளாகத்தின் உள்ளே அனுமதிப்பது இல்லை.இதன் காரணமாக தொழிலாளர்கள் சாலை ஓரம் இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டுச் செல்கின்றனர். இதுபோன்று நிறுத்தப்படும் வாகனங்களால் இந்த பகுதியை கடந்து செல்லும் பாதசாரிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே சாலை ஓரம் மற்றும் நடை பாதைகளில் வாகனங்களை நிறுத்த நகராட்சி நிர்வாகம் மற்றும் போலீசார் தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.