உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கையில் 9 மருத்துவர் பணியிடம் காலி ஆர்.டி.ஐ., மனுவுக்கு சுகாதார துறை பதில்

செங்கையில் 9 மருத்துவர் பணியிடம் காலி ஆர்.டி.ஐ., மனுவுக்கு சுகாதார துறை பதில்

செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டத்தில், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை கட்டுப்பாட்டின் கீழ் முதன்மை, கூடுதல் மற்றும் துணை சுகாதார நிலையங்கள் இயங்குகின்றன.சுகாதார நிலையங்களில் உள்நோயாளிகள், புறநோயாளிகள், மகப்பேறு, ரத்த பரிசோதனை மற்றும் நோய்த் தடுப்பு நடவடிக்கை உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.பொருளாதாரத்தில் பின்தங்கிய பெரும்பாலான ஏழை, எளிய மக்கள், சுகாதார நிலையங்களில் வழங்கப்படும் இலவச மருத்துவத்தால் பயனடைந்து வருகின்றனர்.இந்நிலையில், சுகாதார நிலையங்களில் உள்ள மருத்துவர் காலிப் பணியிடங்கள் குறித்து, சமூக ஆர்வலர் கருணாகரன் என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்வி எழுப்பி இருந்தார்.இந்த மனுவுக்கு, மாவட்ட சுகாதார பொது தகவல் அலுவலர், பதில் அனுப்பி உள்ளார்.அதில், செங்கல்பட்டு மாவட்டதில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் நந்திவரம் 2, வல்லிபுரம், இடைக்கழிநாடு, பவுஞ்சூர், அச்சிறுப்பாக்கம், ஜமீன் எண்டத்துார், இரும்பேடு, படாளம் தலா 1 என, மொத்தம் 9 மருத்துவர் காலிப் பணியிடங்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.இந்த காலிப் பணியிடங்கள், பணி நியமனம் மற்றும் பணியிட மாறுதல் கலந்தாய்வின்படி பணி அமர்த்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள காலிப் பணியிடங்களால், சிகிச்சைக்கு செல்லும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.மேலும், காலிப் பணியிடங்கள் உள்ள சுகாதார நிலையங்களுக்கு அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவர்கள், சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.இதனால், மருத்துவர்களுக்கும் பணிச்சுமை ஏற்படுகிறது.எனவே, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறை அதிகாரிகள், காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி