உயர்கோபுர மின்விளக்கு பழுது பரனுார் சுங்கச்சாவடியில் அச்சம்
மறைமலைநகர்,-திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பரனுார் சுங்கச்சாவடி அருகில், சாலையின் இரு பக்கமும் ஐந்து உயர் கோபுர மின் விளக்குகள் உள்ளன.இவற்றில், இரண்டு மின் கம்பங்களில் உள்ள விளக்குகள் பழுதடைந்து, பல மாதங்களாக வெறும் காட்சிப் பொருளாகவே உள்ளன. வாகன ஓட்டிகளின் சிரமத்தைப் போக்கும் வகையில், இவற்றை சீரமைக்க வேண்டுமென, கோரிக்கை வலுத்து உள்ளது.இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:பரனுார் சுங்கச்சாவடி அருகில் உயர் கோபுர மின் விளக்குகள் எரியாததால், சுங்கச்சாவடியில் இறங்கி பரனுார் ரயில் நிலையம் மற்றும் மகேந்திரா சிட்டி பகுதிகளுக்குச் சென்று வருவோர் அச்சப்படுகின்றனர்.இந்த பகுதியில் தனியே நடந்து செல்பவர்களை குறி வைத்து, செயின் பறிப்பு மற்றும் வழிப்பறி சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருவதால், இந்த பகுதியை பயத்துடன் கடந்து செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.எனவே, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் இந்த பகுதியில் எரியாமல் உள்ள மின் விளக்குகளை மாற்றி, புதிதாக பொருத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.