உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வண்டலுாரில் வீட்டு எண்கள் மாற்றம் பகுதிவாசிகள் எதிர்ப்பால் பணி நிறுத்தம்

வண்டலுாரில் வீட்டு எண்கள் மாற்றம் பகுதிவாசிகள் எதிர்ப்பால் பணி நிறுத்தம்

வண்டலுார்:வண்டலுாரில், வீடுகளின் கதவு இலக்க எண்கள் மாற்றப்படுவதற்கு பகுதிவாசிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அப்பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், வண்டலுார் ஊராட்சியில், 15 வார்டுகள், 232 தெருக்கள் உள்ளன. கடந்த சட்டசபை தேர்தல் கணக்குப்படி, 31,280 பேர் வசிக்கின்றனர்.இந்நிலையில், கடந்த சில மாதங்களாக, இங்குள்ள வீடுகளின் கதவு எண்களை மாற்றும் பணியில், ஊராட்சி நிர்வாகம் ஈடுபட்டது. பழைய எண்களுக்கு பதிலாக, ஒவ்வொரு வீட்டிற்கும் புதிய எண்கள் வழங்கப்பட்டன. இதற்கு பகுதிவாசிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், இந்த பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டு உள்ளது.இதுகுறித்து, பகுதிவாசிகள் கூறியதாவது:வீட்டின் கதவு எண்ணை மாற்றுவதால், முகவரியும் மாறுகிறது. ஆதார், ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை, ஓட்டுனர் உரிமம், சமையல் காஸ் சிலிண்டர், மின் கணக்கு அட்டை என, அனைத்து ஆவணங்களிலும் பழைய எண் உள்ளது.இந்நிலையில், வீடுதோறும் புதிய எண் வழங்கப்படுவதால், அனைத்து ஆவணங்களையும் புதிய எண்ணுக்கு ஏற்ப மாற்ற வேண்டும். இதற்கு அதிக காலம் பிடிக்கும். அலைச்சலும் ஏற்படும்.தவிர, ஒவ்வொரு அலுவலகமாக சென்று, புதிய எண் அடிப்படையில் ஆவணங்களை மாற்றுவது, கால விரயத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தும்.ஆவணங்கள் அனைத்திற்குமான புதிய எண், முகவரி மாற்றத்தை எவ்வித செலவும் இல்லாமல் செய்து தர, அரசே சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும்.அப்படிச் செய்யாத வரை, புதிய எண் மாற்றத்திற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதை தவிர்க்க முடியாது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.இதுகுறித்து, உள்ளாட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது:கடந்த 20 ஆண்டுகளில், ஏராளமானோர் இப்பகுதியில் புதிதாக வீடு கட்டி உள்ளனர். அந்த வீடுகள் பழைய வீடுகளுக்கு இடையே கட்டப்பட்டிருக்கும் நிலையில், வரிசைப்படி கதவு எண் வருவதற்காக இந்த மாற்றம் செய்யப்படுகிறது.மற்றபடி, புதிய வீடுகள் கட்டப்படாத தெருக்களில் உள்ள வீடுகளுக்கு, பழைய எண்களே நடைமுறையில் இருக்கும். இந்த நடைமுறை, மாவட்டம் முழுதும் முன்னெடுக்கப்பட்டு உள்ளது.தற்போது, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. ஆனால், விரைவில் இதற்கான பணிகள் உள்ளாட்சி நிர்வாகம் சார்பில், மீண்டும் துவக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை