உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  செங்கை மாவட்டத்தில் மேய்க்கால் புறம்போக்கு நிலங்கள்... ஆக்கிரமிப்பு:நலன் காக்கும் கூட்டத்தில் விவசாயிகள் சரமாரி குற்றச்சாட்டு

 செங்கை மாவட்டத்தில் மேய்க்கால் புறம்போக்கு நிலங்கள்... ஆக்கிரமிப்பு:நலன் காக்கும் கூட்டத்தில் விவசாயிகள் சரமாரி குற்றச்சாட்டு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் கால்நடைகள் மேய்ச்சலுக்காக, மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதுகாக்க வேண்டும். மதுராந்தகம் ஏரியிலிருந்து செய்யூர் வரை செல்லும் உயர்மட்ட கால்வாயை துார்வாரி சீரமைக்காததால், 40 ஏரிகளுக்கு தண்ணீர் செல்வது பாதிக்கப்பட்டுள்ளது' என, நலன் காக்கும் கூட்டத்தில் விவசாயிகள் சரமாரி குற்றஞ்சாட்டினர். செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், கலெக்டர் சினேகா தலைமையில் நேற்று நடந்தது. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார், வேளாண்மை இணை இயக்குநர் பிரேம்சாந்தி, மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் நந்திகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜேஸ்வரி உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில், விவசாயிகள் பேசியதாவது: ஜெயச்சந்திரன், விவசாயி, அரியனுார்: மதுராந்தகம் ஏரியிலிருந்து, செய்யூர் வரை கடந்த 1986ம் ஆண்டு, 32 கி.மீ., துாரம் உயர்மட்ட கால்வாய் கட்டப்பட்டது. இந்த உயர்மட்ட கால்வாய் 40 ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும் வகையில் அமைக்கப்பட்டது. ஆனால், கடந்த பல ஆண்டுகளாக, இந்த உயர்மட்ட கால்வாயை துார்வாராமல் விட்டதால், கால்வாய் துார்ந்துள்ளது. இதனால், 40 ஏரிகளுக்கு தண்ணீர் செல்வதில் பிரச்னை ஏற்பட்டு, விவசாயத்திற்கு போதிய தண்ணீர் கிடைப்பதில்லை. இந்த உயர்மட்ட கால்வாயை துார்வாரி சீரமைக்க வேண்டும். இவ்வாறு செய்தால், 1,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்பெறுவர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கிராமங்களில், கால்நடை மேய்ச்சலுக்காக மேய்க்கால் புறம்போக்கு நிலங்கள் ஒதுக்கப்பட்டன. இந்த மேய்க்கால் புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால், கால்நடைகளை மேய்க்க இடம் இல்லாமல் சிரமமாக உள்ளது. அத்துடன், அரசு திட்டங்களுக்கும் மேய்க்கால் புறம்போக்கு நிலங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஆக்கிரமிப்பில் உள்ள மேய்க்கால் புறம்போக்கு நிலங்களை மீட்டு பாதுகாக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சினேகா கலெக்டர்: மதுராந்தகம் - செய்யூர் உயர்மட்ட கால்வாய் சீரமைப்புக்கு நீர்வளத்துறை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். லட்சாதிபதி, விவசாயி: திருக்கழுக்குன்றம் தாலுகாவில் ஆயப்பாக்கம், நல்லாத்துார், வாயலுார் கிராமங்களில், மேய்க்கால் புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. இந்த நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மே ய்க்கால் நிலங்களை பாதுகாக்க, நீதிமன்றம் செல்ல உள்ளேன். கிழக்கு கடற்கரை சாலை, ஓ.எம்.ஆர்., சாலைகளில் மாடுகள் சுற்றித் திரிவதால் விபத்துகள் ஏற்படுகின்றன. சாலையில் சுற்றி திரியும் மாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். வெங்கடேசன், மாவட்ட விவசாய நலச்சங்க தலைவர்: தனியார் உரக்கடைகளில் பூச்சி மருந்துகள், உரம் உள்ளிட்டவற்றின் அதிகபட்ச விலையை விட அதிகமாக, விவசாயிகளிடம் வசூலிக்கின்றனர்.மருந்துகளின் விலையை, கடைகளின் வெளியில் பட்டியலாக வைக்க வேண்டும். அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் பணி யாற்றும் கூலித் தொழிலாளிகளுக்கு, ஒரு மூட்டைக்கு 10 ரூபாய் அரசு வழங்குகிறது. ஆனாலும், விவசாயிகளிடம் 40 கிலோ கொண்ட நெல் மூட்டை ஒன்றுக்கு, 60 ரூபாய் லஞ்சம் வாங்கப்படுகிறது. கூலித்தொழிலாளிகளுக்கு கொடுக்க வேண்டிய 7 கோடி ரூபாய், ஒப்பந்ததாரர்களிடம் வழங்கப்படுகிறது. இந்த தொகையை மீட்டு, கூலித்தொழிலா ளிகளுக்கு வழங்க வேண்டும். அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் துங்குவதற்கு முன், விவசாயிகளுடன் ஆலோசனை நடத்த வேண்டும். கொள்முதல் நிலையங்களில், இடைத்தரர்களை அனுமதிக்கக் கூடாது. திருவள்ளூர் மாவட்டம், ஆந்திர மாநிலங்களில் இருந்து வரும் நெல், செங்கல்பட்டு மாவட்ட நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முரளிமோகன், கரும்பு விவசாய சங்க செயலர்: விவசாய நிலங்களில் சாகுபடி செய்யப்படும் நெற்பயிர், கரும்பு, மணிலா போன்றவற்றை காட்டுப்பன்றிகள் அழித்து விடுகின்றன. இதனால், நிலங்களில் சாகுபடி செய்யப்படும் பயிர்கள், 60 சதவீதம் பாதிக்கப்படுகின்றன. மாவட்டத்தில் காட்டுப்பன்றிகள் அதிகமாக உள்ளதை கட்டுப்படுத்தாவிட்டால், விவசாயம் செய்ய முடியாது. காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம், வனத்துறை இணைந்து செயல்பட வேண்டும். ரவி மீனா, மாவட்ட வன அலுவலர்: காட்டுப்பன்றிகள் நடமாட்டம் குறித்து, வனத்துறை ஊழியரிடம் விவசாயிகள் தகவல் தெரிவிக்க வேண்டும். காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு, கூட்டத்தில் விவாதம் நடந்தது. அத்துடன், கால்நடைகளின் மேய்ச்சல் வசதி கருதி, அரசு மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில் பட்டா வழங்குவதை தவிர்க்க வேண்டும்; நெல் கொள்முதல் நிலையங்களில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ