மறைமலை நகர் சர்வீஸ் சாலையில் விளக்குகள் அமைக்க வலியுறுத்தல்
மறைமலை நகர்:திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பொத்தேரி, காட்டாங்கொளத்துார், மறைமலை நகர், பேரமனுார், கீழக்கரணை, மெல்ரோசாபுரம் உள்ளிட்ட 7 கி.மீ., துாரம், மறைமலை நகர் நகராட்சி எல்லையில் உள்ளது.இந்த பகுதிகளில் உள்ள பேருந்து நிறுத்தம், வணிக கட்டடங்கள், தொழிற்சாலைகளுக்கு, சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வந்து செல்கின்றனர்.இந்த பகுதியில் உள்ள சர்வீஸ் சாலைகளில், முறையாக தெரு விளக்குகள் அமைக்கப்படாததால், இந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. அதனால், அப்பகுதிவாசிகள் அவதியடைந்து வருகின்றனர்.இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:இந்த பகுதியில் உள்ள சர்வீஸ் சாலையை, இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.இருபுறமும் உள்ள சர்வீஸ் சாலையில் விளக்குகள் அமைக்கப்படாததால், பெண்கள், குழந்தைகள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.விபத்து மற்றும் திருட்டு பயத்துடன், இந்த பகுதிகளை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, நகராட்சி சார்பில், இந்த பகுதியில் மின் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.