தாழம்பூர் சாலையை அகலப்படுத்த வலியுறுத்தல்
திருப்போரூர் தாழம்பூர் - -நத்தம் இணைப்பு சாலையை அகலப்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர். கேளம்பாக்கம் அருகே உள்ள தாழம்பூர் ஊராட்சியில் உள்ள நத்தம், காரணை உள்ளிட்ட கிராமங்களில், 8,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதியின் அருகே, புதுப்பாக்கத்தில் சட்டக்கல்லுாரியும், சிறுசேரியில் சிப்காட் தொழிற்பூங்காவும் உள்ளது. முக்கிய போக்குவரத்து சாலையாக, தாழம்பூர் - -நத்தம் இணைப்பு சாலை 2 கி.மீ., உள்ளது. இச்சாலை வழியாக, சிறுசேரி சிப்காட்டிற்கு ஏராளமான ஊழியர்கள் செல்கின்றனர். இந்த சாலை அகலம் குறைவாக உள்ளது. சில இடங்களில் சாலை ஓரங்களில் பள்ளம் உள்ளது. எதிரெதிரே வாகனங்கள் செல்லும் போது ஒதுங்க வழியில்லாமல் உள்ளது. எனவே, சாலையை அகலப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.