உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஏரி வண்டல் மண் எடுக்க விண்ணப்பிக்க அழைப்பு

ஏரி வண்டல் மண் எடுக்க விண்ணப்பிக்க அழைப்பு

செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டத்தில், ஏரிகளில் வண்டல் மண் எடுக்க, விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்கள் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள், நீர்வள ஆதாரத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகளில், வண்டல் மண், களிமண் ஆகியற்றை இலவசமாக எடுத்துச் செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டது.இதில், நீர்வள ஆதாரத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில், செங்கல்பட்டு தாலுகாவில் 26 ஏரிகளும், மதுராந்தகம் தாலுகாவில் 233 ஏரிகளும், செய்யூர் தாலுகாவில் 161 ஏரிகளும் உள்ளன.திருக்கழுக்ககுன்றம் தாலுகாவில் 118 ஏரிகளும், திருப்போரூர் தாலுகாவில் 58 ஏரிகளும், வண்டலுார் தாலுகாவில் 34 ஏரிகளும், பல்லாவரம் தாலுகாவில் மூன்று ஏரிகளும், தாம்பரம் தாலுகாவில் எட்டு ஏரிகளும் என, மொத்தம் 641 ஏரிகளில் மண் எடுக்க அனுமதி வழங்கி, மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டது. விவசாய பயன்பாட்டிற்காக வண்டல் மண்ணை பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்கும் நபர், விவசாய நிலம் வைத்துள்ளவராக இருக்க வேண்டும் அல்லது குத்தகை பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு, குத்தகைதாரராக இருக்க வேண்டும்.மண்பாண்ட தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் சான்று பெற வேண்டும். மேலும் விபரங்களுக்கு, சம்பந்தப்பட்ட தாசில்தார்கள் கலெக்டரின் நேர்முக உதவியாளர் மற்றும் புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனரை அணுகி தெரிந்துகொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி