உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கரிக்கிலி பறவைகள் சரணாலய எல்லைகள்...விரிவாக்கம்!:சுற்றுப்புற கிராமத்தினர் கருத்து கூற அறிவிப்பு

கரிக்கிலி பறவைகள் சரணாலய எல்லைகள்...விரிவாக்கம்!:சுற்றுப்புற கிராமத்தினர் கருத்து கூற அறிவிப்பு

மதுராந்தகம்:கரிக்கிலி பறவைகள் சரணாலயத்தின் எல்லை பகுதிகள், விரைவில் அறிவிக்கப்பட உள்ளன. இந்த விரிவாக்கம் குறித்து, பொதுமக்கள் தங்களின் ஆட்சேபனை உள்ளிட்ட கருத்துகளை தெரிவிக்கலாம் என, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகம் சார்பில், நாளிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் இருந்து, 5 கி.மீ., தொலைவில், கரிக்கிலி ஊராட்சி அமைந்துள்ளது.கரிக்கிலி ஏரியில் நீர் கடம்ப மரங்கள் அதிகம் உள்ளதால், பறவைகள் வரத்து அதிகரித்ததால், கடந்த 1989ல் கரிக்கிலி பறவைகள் சரணாலயம் அறிவிக்கப்பட்டது.புல எண் 188ல், 151 ஏக்கர் பரப்பளவில், இந்த சரணாலயம் உள்ளது.கரிக்கிலி பறவைகள் சரணாலயத்தில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், பறவைகள் நிறைந்து காணப்பட்டன. இங்கு, வடக்கு பின்டெயில், கார்களே, காமன், சாண்ட்பைபர் போன்ற, பல புலம்பெயர்ந்த பறவைகள் குவிந்தன.வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வரும் பறவைகள் பெரும்பாலும், கரிக்கிலி பறவைகள் சரணாலயத்தில் முகாமிட்டு இருந்தன.ஆனால், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, பறவைகளின்றி வெறிச்சோடி உள்ளது.ஏரிக்கரை சீரமைக்கப்படாமல், ஏரியில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால், பறவைகள் வரத்து இல்லை.ஏரிக்கு நீர் வரும் வரத்து கால்வாய் மற்றும் ஏரியிலிருந்து வெளியேறும் உபரி நீர் கால்வாய் போன்றவற்றை, வனத்துறையினர் சீரமைக்காமல் உள்ளனர்.பறவைகளின் உணவு தேவைக்காக மீன் குஞ்சுகள் போன்றவற்றை ஏரியில் வளர்க்காமல் விட்டதால், பறவைகள் வரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது.குறிப்பாக, ஏரியில் உள்ள நீர் கடம்ப மரங்களின் மீது பாலக்கொடி எனும் வகை கொடி படர்ந்து உள்ளதால், பறவைகள் அதை வலை எனக் கருதி அச்சம் கொள்வதாக கூறப்படுகிறது.மேலும், ஏரி தண்ணீரில் உள்ள ஆடுதின்னா பாலை கொடியால், பறவைகள் அச்சத்தில் வருவதில்லை என, பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர்.இந்த பகுதியை சுற்றி, 8 கி.மீ., துாரம், கரிக்கிலி பறவைகள் சரணாலயமாக, வனத்துறையால் அறிவிக்கப்பட்ட உள்ளது. இதற்கான அறிவிப்புகளும் ஏற்கனவே வெளியிடப்பட்டது. ஆனால், மக்கள் எதிப்பு தெரிவிக்கவில்லை.இந்நிலையில், கரிக்கிலி பறவைகள் சரணாலயம் எல்லையை விரிவாக்கம் செய்ய, செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ், நாளிதழில் அறிவிப்பு வெளியிட்டு, ஊராட்சிகள் ஆட்சேபனை தெரிவிக்க, கடந்த 7ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:கரிக்கிலி பறவைகள் சரணாலயம் என அறிவிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட நிலங்களிலோ, அட்டவணையில் உள்ள கிராம நிலங்களின் மீது அல்லது அவற்றில் உள்ள வன விளை பொருட்களுக்கு, உரிமை அல்லது ஆட்சேபனை கூறுகின்ற எவரும், அறிவிப்பு நாளிலிருந்து இரு மாதங்களுக்குள் ஆட்சேபனை தெரிவிக்கலாம். அத்தகைய உரிமையின் தன்மை அளவையும், வேண்டிய விவரங்களுடன் எழுத்து வாயிலாக, உரிமை கோரிக்கையை குறிப்பிட்ட படிவத்தில் எழுதி அனுப்ப வேண்டும்.தமிழ்நாடு வனவிலங்கு பாதுகாப்பு சட்ட விதிகளின் கீழ் செங்கல்பட்டு கலெக்டருக்கும், உத்திரமேரூர் வட்டத்தைச் சேர்ந்த கிராமத்தினர், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டருக்கும் அனுப்பி வைக்க வேண்டும். தவறும்பட்சத்தில், மாவட்ட ஆட்சியரால் இறுதி முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.கரிக்கிலி பறவைகள் சரணாலயம் தற்போது, பறவைகளின்றி வெறிச்சோடி உள்ளது.பறவைகளை கவரும் வகையில், கரிக்கிலி ஏரியை துார் வாரி, ஆழப்படுத்த வேண்டும்.ஏரியில் நீர் கடம்ப மரங்களை நட்டு வளர்க்க வேண்டும். ஏரியில் உள்ள ஆடு தின்னா பாலைக் கொடி மற்றும் நீர் கடம்ப மரங்களின் மீதுள்ள பாலக் கொடிகளை முற்றிலும் அகற்ற வேண்டும்.ஏரியில் உள்ள இக்கொடிகளின் மீது பறவைகள் அமரும் போது, அவை அச்சம் கொள்வதால், மீண்டும் வருவதில்லை.ஏரியை சீரமைத்து நடைபாதை, குடிநீர், நுழைவு கட்டணம் போன்றவற்றை ஏற்படுத்தி மேம்படுத்த, வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கொடியான், 62, கரிக்கிலி.கரிக்கிலி பறவைகள் சரணாலயம் உள்ளதால், சுற்றியுள்ள பகுதியில் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் இல்லாமல், இப்பகுதி மக்கள் தினக்கூலி வேலைக்கு செல்லும் நிலை உள்ளது. இப்பகுதி மக்களின் மேம்பாட்டிற்கு தேவையான வசதிகளை, அரசு செய்ய வேண்டும். சரணாலயம் வளர்ச்சி மற்றும் அதையொட்டி உள்ள கிராம மக்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- விஜயகுமார்,துணை தலைவர், வெள்ளப்புத்துார் ஊராட்சி.

செங்கல்பட்டு வனக்கோட்டம், மதுராந்தகம் வட்டத்திற்கு உட்பட்ட கிராமங்கள்:

கரிக்கிலி, சித்தாமூர், கொளத்துார், பழக்காடு, வெள்ளப்புத்துார், பாப்பநல்லுார், பள்ளியகரம், கல்லாங்கொள்ளை, கருணாகரச்சேரி, குமாரவாடி, மலைவையாவூர், பேட்டை, குன்னங்குளத்துார், புழுதிவாக்கம், நெல்லி, மங்கலம், நெல்வாய், நெல்வாய் கூட்ரோடு, இந்திராபுரம், சுக்காம் கொள்ளை.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டத்திற்கு உட்பட்ட கிராமங்கள்

தோட்ட நாவல், வனத்தோடு, ரெட்டமங்கலம், விண்ணமங்கலம், காட்டுப்புத்துார், கைத்தண்டலம், ஒழையூர், நெல்வேலி, கட்டிய பந்தல், பெருங்கோழி, தளராம் பூண்டி, கடல் மங்கலம், ஆலஞ்சேரி, சடச்சிவாக்கம், சேந்தமங்கலம், மெய்யூரோடை, கீழோடை, சிறுகோழி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை