கரிக்கிலி சரணாலயம் பறவைகள் இல்லாமல்... வெறிச்சோடியது:வனத்துறை மீது பறவை ஆர்வலர்கள் குற்றச்சாட்டு
மதுராந்தகம்:மதுராந்தகம் அருகே உள்ள கரிக்கிலி சரணாலயம், பறவைகள் இல்லாமல் வெறிச்சோடியுள்ளது. வனத்துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ளாததே இதற்கு காரணம் என, பறவை ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் இருந்து, 5 கி.மீ., தொலைவில் கரிக்கிலி ஊராட்சி அமைந்துள்ளது.
அறிவிப்பு
இங்குள்ள கரிக்கிலி ஏரி, புல எண்:188ல், 151.25 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த ஏரியில் நீர் கடம்ப மரங்கள் அதிகம் உள்ளதால், பறவைகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. அதன் காரணமாக, 1989ம் ஆண்டு, கரிக்கிலி பறவைகள் சரணாலயம் அறிவிக்கப்பட்டது. ஆண்டுதோறும் வேடந்தாங்கலில் பறவைகள் சீசன் துவங்கும் போது, கரிக்கிலி சரணாலயத்திலும் பறவைகள் வரத்து இருந்தது. இதனால் அப் போது, சுற்றுலா பயணியரின் பார்வைக்கு திறக்கப்பட்டது. அத்துடன், வேடந்தாங்கல் சரணாலயத்தில் உள்ள ஏரியை விட, இரு மடங்கு பெரிய ஏரியாக, கரிக்கிலி சரணாலய ஏரி உள்ளது. இதனால், வேடந்தாங்கல் சரணாலயம் போன்ற தோற்றத்திற்கு, கரிக்கிலி பறவைகள் சரணாலயமும் மாற்றப்பட்டது. இந்நிலையில், கரிக் கி லி சரணாலயத்தை புனரமைக்க தமிழக அரசு, 2014ம் ஆண்டு, 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியது. இந்த தொகையில், சுற்றுலா பயணியருக்கான நடைபாதையை விரிவுபடுத்துதல், ஏரியை துார்வாரி கரையை பலப்படுத்துதல், பார்வையாளர்கள் மாடம், குடிநீர் குழாய்கள், கழிப் பறையை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. முற்றிலும் தடை
இருப்பினும், சரணாலயத்தை சரியான முறையில் பராமரிக்காததால், நாளடைவில் இருக்கைகள், நடைபாதை, பறவைகள் மற்றும் விலங்குகள் வடிவில் அமைக்கப்பட்ட குழாய்கள் சேதமடைந்தன . அதன் பின், ஏரியில் ஆடுதின்னா பாலைக் கொடி வளர்ந்து மூடியதால், பறவைகள் வரத்து குறைந்தன. தற்போது, பறவைகளே இல்லாமல் வெறிச்சோடி உள்ளது. கரிக்கிலி பறவைகள் சரணாலயத்தில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், பறவைகள் நிறைந்து காணப்பட்டது. வேடந்தாங்கல் பறவை கள் சரணாலயத்திற்கு வரும் பறவைகள், பெரும் பாலும் கரிக்கிலி பறவைகள் சரணாலயத்திலும் முகாமிட்டு இருந்தன. ஆனால் தற்போது, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, பறவைகள் இல்லாமல் வெறிச்சோடி உள்ளது. குறிப்பாக, ஏரி சீரமைப்பு பணிகளின் போது, ஏரிக்கரை முறையாக சீரமைக்கப்படாததால், ஏரியில் போதிய அளவு தண்ணீர் இல்லாமல், பறவைகள் வரத்து குறைந்தன. ஏரிக்கு நீர் வரும் வரத்து கால்வாய் மற்றும் ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீர் கால்வாய் போன்றவற்றை, வனத்துறையினர் சீரமைக்காமல் வைத்துள்ளனர். பறவைகளின் உணவு தேவைக்காக, மீன் குஞ்சுகள் போன்றவற்றை ஏரியில் வளர்க்காமல் விட்டதால், பறவைகள் வரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. அத்துடன் முக்கிய பிரச்னையாக, ஏரியில் உள்ள நீர் கடம்ப மரங்களின் மீது, ஆடுதின்னா பாலைக்கொடி படர்ந்து உள்ளதால், பறவைகள் மரத்தில் அமரும் போது, கால்களில் கொடி சிக்குவதால் அச்சமடைகின்றன. இதனால் பறவைகள் வரத்து நின்றதாக, பறவை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். 'பாலைக்கொடி'களை அகற்ற வேண்டும் பறவை ஆர்வலர்கள் கூறியதாவது: கரிக்கிலி ஏரியை துார்வாரி, ஆழப்படுத்த வேண்டும். ஏரியில் நீர் கடம்ப மரங்களை, அதிக அளவில் நட்டு வளர்க்க வேண்டும். ஏரியில் உள்ள ஆடுதின்னா பாலைக்கொடி மற்றும் நீர் கடம்ப மரங்களின் மீது உள்ள பாலைக்கொடிகளை முற்றிலும் அகற்ற வேண்டும். இக்கொடிகளின் மீது பறவைகள் அமரும் போது, அவை அச்சம் கொள்வதால், மீண்டும் வருவதில்லை. எனவே, ஏரியை துார்வாரி சீரமைத்து, நடைபாதை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும். மேலும், சரணாலயத்தை மேம்படுத்த, வனத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.