வல்லம் இருளாண்டி நகரில் குடிநீர் வசதியின்றி தவிப்பு
வல்லம்,:வல்லம் ஊராட்சி, இருளாண்டி நகரில், குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என, பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.செங்கல்பட்டு அடுத்த வல்லம் ஊராட்சியில், அம்மணம்பாக்கம் கிராமம், இருளாண்டி நகரில், 75க்கும் மேற்பட்ட இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் வசிப்பிட பகுதியில் குடிநீர் இல்லாததால், அருகிலுள்ள பகுதிகளுக்குச் சென்று, தண்ணீர் எடுத்து வருகின்றனர். குடிநீர் வசதி செய்து தரக்கோரி, ஊராட்சி நிர்வாகம், காட்டாங்கொளத்துார் ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம், புகார் மனு அளித்தனர்.இம்மனு மீது நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், பள்ளி செல்லும் மாணவர்கள், அத்தியாவசிய பணிக்கு செல்வோர், தண்ணீரின்றி கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். வடகிழக்கு பருவ மழை துவங்குவதற்குள், மாவட்ட நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையினர், இருளாண்டி நகரில் குடிநீர் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர்.