உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வண்டலுார் பூங்காவில் லயன் சபாரி நிறுத்தம்: தென்பட்டது சிங்கம் ஷெரியார்

வண்டலுார் பூங்காவில் லயன் சபாரி நிறுத்தம்: தென்பட்டது சிங்கம் ஷெரியார்

தாம்பரம்:சென்னை வண்டலுார் பூங்காவில், பார்வையாளர்கள் கண்டு ரசிப்பதற்காக, 'லயன் சபாரி'யில் விடப்பட்ட இரண்டு சிங்கங்களில், 6 வயதான ஷெரியார் என்ற ஆண் சிங்கம், கூண்டிற்கு திரும்பாமல் மாயமானது. கண்ணுக்கு எட்டும் துாரத்திலும் தென்படவில்லை. இதனால் ஊழியர்கள் பதற்றம் அடைந்தனர். லயன் சபாரியை சுற்றி அமைக்கப்பட்டுள்ள இரும்பு வேலிகள் பாதுகாப்பாக உள்ளதா என, ஆய்வு செய்தனர். இதனால், பூங்கா வட்டாரத்தில் பீதி ஏற்பட்டது. இந்நிலையில், மாயமான சிங்கம், லயன் சபாரி காட்டுப்பகுதிக்குள் சுற்றித்திரிவது, ட்ரோன் கேமரா வாயிலாக உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக, லயன் சபாரிக்கு பார்வை யாளர்கள் அனுமதி நிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக, வண்டலுார் உயிரியல் பூங்கா இயக்குநர் ரிட்டோ வெளியிட்ட அறிக்கை: வண்டலுார் உயிரியல் பூங்காவில் ஒன்பது சிங்கங்கள் உள்ளன. அவற்றில் மூன்று ஆண், இரு பெண் சிங்கங்கள், லயன் சபாரியில் பராமரிக்கப்படுகின்றன. கடந்த 2023ம் ஆண்டு, பெங்களூரு பன்ரைகட்டா உயிரியல் பூங்காவுடன் விலங்கு பரிமாற்ற திட்டத்தின் கீழ், ெஷரியார், 5 என்ற இளம் சிங்கமும் சபாரி பகுதிக்குள் விடப்பட்டு இருந்தது. இந்த சிங்கம் 3ம்தேதி இரவு தங்குமிடத்திற்கு திரும்பவில்லை. லயன் சபாரி பகுதி, 50 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளன. சிங்கத்தின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்ய, ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சபாரி பகுதி முழுதும் எல்லை சுவர் மற்றும் சங்கிலி இணைப்பு வேலி வாயிலாக பாதுகாக்கப் பட்டு உள்ளது. பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் சிங்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ட்ரோன்கள், 10 கண்காணிப்பு கேமராக்கள் வாயிலாக, லயன் சபாரி கண்காணிக்கப்படுகிறது. மீட்பு குழுக்கள் சிங்கத்தை கண்டுள்ளன. சிங்கத்தின் கால்தடங்கள் கவனிக்கப்பட்டு உள்ளன. இது, சபாரி பகுதிக்குள் சிங்கம் இருப்பதை உறுதிபடுத்துகிறது. இளம் சிங்கங்கள் வழக்கமாக அலைந்து திரிந்து, தங்கள் சுற்றுப்புறங்களை ஆராயும். முந்தைய நிகழ்வுகளில் அத்தகைய சிங்கங்கள், இரண்டு, மூன்று நாட்களுக்குள் தங்குமிடங்களுக்கு பாதுகாப்பாக திரும்பியுள்ளன. சிங்கத்தின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய, சபாரி பகுதிக்குள் உணவு மற்றும் தண்ணீருக்கு போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை