உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பூங்கா இடத்தில் குப்பை குவித்து உரம் தயாரிப்பு...அத்துமீறல்: கூடுவாஞ்சேரி நகராட்சி மீது பகுதிவாசிகள் குற்றச்சாட்டு

பூங்கா இடத்தில் குப்பை குவித்து உரம் தயாரிப்பு...அத்துமீறல்: கூடுவாஞ்சேரி நகராட்சி மீது பகுதிவாசிகள் குற்றச்சாட்டு

கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரியில், பூங்காவிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தை நகராட்சியே ஆக்கிரமித்து, பல டன் அளவிற்கு குப்பை தேக்கி வைத்து, சுகாதார சீர்கேட்டை விளைவிப்பதாக, பகுதிவாசிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இங்கு குப்பை கொட்டுவதை நிறுத்தி, பூங்கா அமைக்க வேண்டுமென, வலியுறுத்தி உள்ளனர்.செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி நகராட்சியில் உள்ள 30 வார்டுகளில், ஒரு லட்சம் நபர்கள் வசிக்கின்றனர்.இங்கு, 30வது வார்டுக்கு உட்பட்ட சீயோன் நகரில், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், வீட்டு மனைப்பிரிவுகள் உருவாக்கப்பட்டன.இதில் வீடுகட்டி குடியேறும் நபர்களுக்கு பூங்கா அமைக்க, 'ஓ.எஸ்.ஆர்.,' விதிப்படி, 20,000 சதுர அடி திறந்தவெளி இடம் ஒதுக்கப்பட்டது.அதில் பகுதிவாசிகள், குழந்தைகள் பொழுதுபோக்கும்படி பூங்கா அமைக்க, அப்போதைய அரசு நிர்வாகம் திட்டமிட்டது.கடந்த 20 ஆண்டுகளில், இப்பகுதியில் தனியார் குடியிருப்புகள் கட்டப்பட்டன.தவிர, தனி நபர்களும் மனை வாங்கி, வீடு கட்டி குடியேறினர்.தற்போது, 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், சீயோன் நகரில் வசிக்கின்றனர். அடுத்த சில ஆண்டுகளில், இந்த எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிக்கும்.இந்நிலையில், இப்பகுதியில் பூங்கா அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட 20,000 சதுர அடி திறந்தவெளி இடத்தின் சிறு பகுதியில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், அப்போதைய கூடுவாஞ்சேரி பேரூராட்சி நிர்வாகம் குப்பை கொட்டத் துவங்கியது.இந்நிலையில், கூடுவாஞ்சேரி பேரூராட்சி 2021ம் ஆண்டு, நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.அதைத் தொடர்ந்து 2022ல், பூங்காவிற்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில், 'துாய்மை இந்தியா திடக்கழிவு மேலாண்மை திட்டம்' என்ற பெயரில், 'எம்.சி.சி.,' எனப்படும், 'பசுமை நுண் உரம் செயலாக்க மையம்' என்ற ஆலையை, நகராட்சி நிர்வாகம் துவக்கியது.இந்த ஆலையின் வாயிலாக, மட்கும் குப்பையிலிருந்து உரம் தயாரிக்கப்பட வேண்டும் என்பதால், கூடுவாஞ்சேரி நகராட்சியிலிருந்து சேகரமாகும் குப்பை, தினமும் 10 டன் அளவிற்கு இங்கு கொட்டப்பட்டது.இதனால், இப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசத் துவங்கி, சுகாதார சீர்கேடு ஏற்படத் துவங்கியது.இந்நிலையில், கடந்த ஓராண்டாக இங்கு கொட்டப்படும் குப்பையின் அளவு தொடர்ந்து அதிகரித்து, பூங்காவிற்கு ஒதுக்கப்பட்ட திறந்தவெளி இடம் முற்றிலுமாக ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. இப்பகுதிவாசிகள், சுகாதார சீர்கேடால் தவித்து வருகின்றனர்.இதுகுறித்து, பகுதிவாசிகள் கூறியதாவது:பூங்காவிற்காக ஒதுக்கப்பட்ட இந்த நிலத்தின் எதிரே, 200 ஏக்கர் பரப்பளவில் நந்திவரம், ராதா நகர் ஏரி உள்ளது. தற்போது ஏரியின் இடமும், மெல்ல மெல்ல ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது.'பூங்கா அமைக்க ஒதுக்கப்பட்ட திறந்தவெளி நிலத்தில், குப்பை கொட்டக்கூடாது' என, 2016ல் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.ஆனால், அந்த உத்தரவை கூடுவாஞ்சேரி நகராட்சி நிர்வாகம் இப்போது வரை மதிக்கவில்லை.பொதுமக்கள் வசிக்கும் இடத்திலிருந்து 500 மீ., துாரத்திற்கு அப்பால் தான், இதுபோன்ற 'பசுமை நுண் உரம் செயலாக்க மையம்' அமைக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவு, இங்கே பின்பற்றப்படவில்லை.ஆனால் இங்கு, குப்பை கொட்டப்பட்டு உரம் தயாரிக்கும் இடத்திலிருந்து, 60 அடி துாரத்தில் வீடுகள் உள்ளன.தவிர, குப்பையில் உணவுக் கழிவுகளும், தாவர கழிவுகளும் கலந்துள்ளதால், அதை உண்பதற்கு பல்வேறு இடங்களில் இருந்து, இங்கு அதிக அளவில் மாடுகள் வருகின்றன.இவை ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டு, தெருவில் நடந்து செல்பவர்களை முட்டி காயப்படுத்துகின்றன.உரம் தயாரிக்கும் ஆலையிலிருந்து வரும் துர்நாற்றம், பகுதிவாசிகளை மூச்சுத்திணறலுக்கு உள்ளாக்குகிறது. இதனால் குழந்தைகள், முதியோர், நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.எனவே, இங்கு குப்பை கொட்டப்படுவதையும், அதிலிருந்து உரம் தயாரிப்பதையும் நிறுத்தி, இப்பகுதிக்கென்று ஒதுக்கப்பட்ட ஓ.எஸ்.ஆர்., நிலத்தில் பூங்கா அமைக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

நகராட்சிக்கு சொந்தமான இடம்

நகராட்சி துாய்மை அதிகாரி ஒருவர் கூறியதாவது:கூடுவாஞ்சேரியில் நாள் ஒன்றுக்கு, 28 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. தற்போது, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், சீயோன் நகர் மற்றும் மகாலட்சுமி நகரில், எம்.சி.சி., எனும் பசுமை நுண் உரம் தயாரிப்பு ஆலை வாயிலாக, நாளொன்றுக்கு 10 டன் மட்கும் குப்பை உரமாகவும், 3 டன் பிளாஸ்டிக் குப்பை மறு சுழற்சியும் செய்யப்படுகிறது.அருள் நகரில் அமைக்கப்பட்டு, விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ள ஆலைகள் வாயிலாக, 5 டன் மட்கும் குப்பை உரமாகவும், 3 டன் பிளாஸ்டிக் குப்பை தினமும் மறு சுழற்சியும் செய்யப்படும்.மேலும், கூடுவாஞ்சேரி நகராட்சி தற்போது, முதல்நிலை நகராட்சியிலிருந்து தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.எனவே, கூடுதலாக மறு சுழற்சி ஆலைகள் நிறுவ, அரசு நிதி ஒதுக்கும். அதன் பின், எங்கும் குப்பை தேங்காது. தேக்கி வைக்கப்படாது.தற்போது சீயோன் நகரில் குப்பை தேக்கி வைக்கப்படும் இடமும், நுண் உரம் தயாரிக்கும் ஆலை அமைந்துள்ள இடமும், நகராட்சிக்கு சொந்தமானது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை