உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மதுராந்தகம் ரேஷன் கடை கூரை சேதம் புது கட்டடம் அமைக்க கோரிக்கை

மதுராந்தகம் ரேஷன் கடை கூரை சேதம் புது கட்டடம் அமைக்க கோரிக்கை

மதுராந்தகம்:மதுராந்தகம் நகராட்சியில் உள்ள ரேஷன் கடையின் கூரை பெயர்ந்து விழுவதால், புதிய கட்டடம் அமைக்க வேண்டுமென, பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுராந்தகம் நகராட்சியில், பொது மருத்துவமனை அருகே, நகராட்சிக்குச் சொந்தமான வணிக வளாகம் உள்ளது. இங்கு, 5 மற்றும் 6ம் எண் கொண்ட இரண்டு ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில், 2,000க்கும் அதிகமான ரேஷன் அட்டைதாரர்கள் பயன் பெற்று வருகின்றனர். தற்போது, நகராட்சிக்கு சொந்தமான கட்டடத்தில் உள்ள ரேஷன் கடையில், 5ம் எண் கொண்ட ரேஷன் கடையின் கூரை சிதிலமடைந்து, பெயர்ந்து விழுந்து வருகிறது. சமீபத்தில், ஊழியர்கள் கடையை திறந்து விற்பனை நடந்து கொண்டிருந்த போது, திடீரென கூரை பகுதியில் இருந்த சிமென்ட் கான்கிரீட் பெயர்ந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக, பணியாளர்கள் மற்றும் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. எனவே, பணியாளர்கள் மற்றும் மக்களின் நலன் கருதி, நகராட்சி நிர்வாகத்தினர் மாற்று இடம் தேர்வு செய்து, ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கோரிக்கை வலுத்துள்ளது. இதுகுறித்து மதுராந்தகம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க மேலாளர் சிவக்குமார் கூறியதாவது: மதுராந்தகத்தில் செயல்படும் 5 மற்றும் 6ம் எண் கொண்ட இரண்டு ரேஷன் கடைகள், நகராட்சிக்கு சொந்தமான பழைய வணிக வளாகத்தில் உள்ளன. கடைக்கு மாற்று இடம் தேர்வு செய்து தரக் கோரி, நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து உள்ளோம். இரண்டு நாட்களில், தற்காலிகமாக மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டு செயல்படுத்தப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !