மாம்பாக்கம் குப்பை கிடங்கிற்கு சுற்றுச்சுவர் இல்லாததால் அவதி
திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியம், மாம்பாக்கம் ஊராட்சியில், 6,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.இங்கு அடுக்குமாடி குடியிருப்புகள், புதிய மனை பிரிவுகள், வணிக கடைகள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன.இங்கிருந்து வெளியேறும் குப்பை மற்றும் கழிவுகள் ஊராட்சி நிர்வாகம் சார்பில், துாய்மை பணியாளர்கள் வாயிலாக சேகரிக்கப்படுகின்றன. இவ்வாறு சேகரிக்கப்படும் குப்பை, கேளம்பாக்கம் - வண்டலுார் சாலையை ஒட்டியுள்ள குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது.இந்த குப்பை கிடங்கிற்கு சுற்றுச்சுவர் இல்லாததால், ஏராளமான கால்நடைகள் எளிதாக நுழைந்து விடுகின்றன. அவை, குப்பை மற்றும் கழிவுகளை கிளறி சாலையில் கொண்டுவந்து விடுகின்றன.அவற்றை மாடுகள் குவிந்து சாப்பிடும் போது, சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன், விபத்துக்கள் ஏற்படுகின்றன.அங்கு, பல மாடுகள் விபத்தில் சிக்கியும் இறந்துள்ளன. இதனால் அங்கு துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு, சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.மேலும், குப்பை கிடங்கு வளாகத்தில் உள்சாலை வசதி இல்லை. குப்பை நுழைவாயில் அருகே கொட்டப்படுவதால், அடுத்தடுத்து குப்பை கொட்டுவதில் சிக்கல் ஏற்படுகிறது.எனவே, மேற்கண்ட குப்பை கிடங்கிற்கு சுற்றுச்சுவர் மற்றும் உள்சாலை வசதி அமைக்க, மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.