உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

செங்கல்பட்டு:சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, செங்கல்பட்டு 'போக்சோ' நீதிமன்றம், நேற்று தீர்ப்பளித்தது. தாம்பரம் அடுத்த சேலையூர் மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி, தாயுடன் வசித்து வருகிறார். கடந்த 2022 அக்டோபரில், அதே பகுதியைச் சேர்ந்த பாலாஜி, 53, என்பவர், சிறுமியை தன் வீட்டிற்கு கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்தார். இதை வெளியில் கூறக் கூடாது என, சிறுமியை மிரட்டி உள்ளார். இதனால் சிறுமி பயந்ததால், பாலாஜி இதை சாதகமாக பயன்படுத்தி, சிறுமியை அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து, சிறுமிக்கு வயிறு வலி ஏற்பட்டதால், நடந்த சம்பவங்களை தாயிடம் கூறியுள்ளார். இதுகுறித்து, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்படி, சேலையூர் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாலாஜியை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு விசாரணை, செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில், நீதிபதி நசீமா பானு முன்னிலையில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில், வழக்கறிஞர் லட்சுமி ஆஜரானார். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், பாலாஜிக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 3,000 ரூபாய் அபராதமும், அபராதம் கட்ட தவறினால், ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து, நீதிபதி நசீமா பானு, நேற்று தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக, 4 லட்சம் ரூபாய் வழங்க, தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். அதன் பின் பாலாஜியை, சென்னை, புழல் சிறையில் போலீசார் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ