திருப்போரூரில் ஆர்.டி.ஓ., அலுவலகம் அமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
திருப்போரூர்:திருப்போரூர் தாலுாவில் வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைக்க வேண்டுமென, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வலுத்துள்ளது.செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் தாலுகாவில், 8 லட்சத்திற்கு மேல் இருசக்கர வாகனம், 8 லட்சம் நான்கு சக்கர வாகனம் மற்றும் கனரக வாகனங்கள் உள்ளன.இங்கிருந்து தினமும் 200க்கும் மேற்பட்டோர் ஓட்டுனர் உரிமம், பழகுனர் உரிமம், புதிய வாகனம் பதிவு செய்தல், தடையில்லாச் சான்று, கனரக வாகன உரிமம் என பல்வேறு பணிகளுக்காக, 40 கி.மீ., துாரத்தில் உள்ள, செங்கல்பட்டு அடுத்த பரனுார் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குச் சென்று வருகின்றனர்.இதனால் போக்குவரத்து செலவு, கால விரயம் ஏற்படுகிறது. மேலும், திருப்போரூர் தாலுகாவிலிருந்து பரனுார் வட்டார போக்குவரத்து அலுவலகம், 40 கி.மீ., தொலைவில் இருப்பதாலும், அதிகமான ஊர் எல்லைகள் உள்ளதாலும், வாகன உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் சேவைகள் தாமதமாகின்றன.போக்குவரத்து விதிமீறல் அதிகரித்து, அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. இதனால், அவ்வப்போது உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. மேலும், 2,500 போக்குவரத்து வாகனமும், 7,500 போக்குவரத்து அல்லாத வாகனமும் இருந்தால் போக்குவரத்து 'யூனிட்' அலுவலகம் அமைக்க சாத்தியம் உள்ளதாக, சட்டசபையில் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், லட்சக்கணக்கான வாகனம் இருந்தும், திருப்போரூரில் போக்குவரத்து அலுவலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என, பகுதிவாசிகள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.இதுதொடர்பாக மக்கள், அரசியல் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தியும், கோரிக்கை மனுக்களை வழங்கியும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.எனவே, திருப்போரூர் தாலுகாவில், உடனடியாக ஒரு யூனிட் அலுவலகமாக மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.