உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / உடைந்த பாதாள சாக்கடை மூடி சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

உடைந்த பாதாள சாக்கடை மூடி சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

மறைமலை நகர்:மறைமலை நகர் சிப்காட் பகுதியில், உடைந்துள்ள பாதாள சாக்கடை மூடியை மாற்ற வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மறைமலை நகர் நகராட்சியில், 21 வார்டுகள் உள்ளன. இதில் ஆறு வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. விடுபட்ட 15 வார்டு களிலும், 300 கோடி மதிப்பீட்டில், புதிதாக பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள், கடந்த ஓராண்டாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மறைமலை நகர், சிப்காட் காமராஜர் சாலையில் இருந்து பெரியார் சாலை செல்லும் குறுக்கு சாலையில், பாதாள சாக்கடை மூடி உடைந்து, பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது: இந்த சாலை வழியாக கனரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள், தினமும் சென்று வருகின்றன. இந்த பகுதியில் பாதாள சாக்கடை மூடி அமைந்துள்ள பகுதி உடைந்து, ஒரு அடி ஆழம் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில், இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் சிக்கி, தடுமாறி வருகின்றனர். விபத்தை தடுக்க வாகன ஓட்டிகள் தற்காலிகமாக, இந்த பள்ளத்தில் மரக் கட்டைகள் வைத்து தடுப்பு ஏற்படுத்தியுள்ளனர். பெரும் விபத்து ஏற்படும் முன், இந்த பாதாள சாக்கடை மூடியை மாற்றி அமைக்க, நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி