பாலுார் ரயில்வே கேட் சாலை சேதம் சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
மறைமலை நகர்:பாலுார் ரயில்வே கேட் பகுதியில், சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாலுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலை, 13 கி.மீ., உடையது. இந்த சாலையை பாலுார், வில்லியம்பாக்கம், ரெட்டிபாளையம் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், இந்த பகுதியில் செயல்படும் கல் குவாரிகளில் இருந்து ஜல்லி, எம் - சாண்ட் மணல் ஏற்றிச் செல்லும் லாரிகளும், இந்த சாலையைப் பயன்படுத்தி வருகின்றன. தற்போது, பாலுார் ரயில்வே 'கேட்' பகுதியில், இச்சாலை சேதமடைந்து உள்ளது. ஜல்லி கற்கள் பெயர்ந்து உள்ளதால், இருசக்கர வாகனங்களின் 'டயர்'கள் அடிக்கடி பஞ்சராகி, வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். சாலை சமனின்றி உள்ளதால், இருசக்கர வாகன ஓட்டிகள் பலர் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். மேலும், கனரக வாகனங்கள் செல்லும் போது புழுதி பறந்து, இருசக்கர வாகன ஓட்டிகளின் கண்களில் பட்டு அவதிப்படுகின்றனர். இதே பகுதியில் இயங்கும் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களும், புழுதியால் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, பாலுார் ரயில்வே கேட் பகுதியில் படிந்துள்ள மண்ணை அகற்றி, சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.