உயர் மின் விளக்கை சீரமைக்க வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
மதுராந்தகம்:மதுராந்தகம் அடுத்த படாளம் கூட்டு சாலை பகுதியில், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில், லாரி பார்க்கிங் உள்ளது.வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் அதிகமுள்ள பகுதியில், சில ஆண்டுகளுக்கு முன், தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில், உயர் கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டது.இரவிலும் பகல் போல ஒளிர்ந்த உயர் கோபுர மின் விளக்கால், கனரக வாகன ஓட்டுனர்கள், அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள், இரவில் அச்சமின்றி இருந்து வந்தனர்.இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், இந்த மின் விளக்கு பழுதடைந்தது. இதை சீரமைக்க, கம்பத்தின் உச்சியில் இருந்த மின் விளக்கை, கம்பத்தின் கீழ் பகுதி வரை இறக்கிய ஊழியர்கள், பழுது நீக்காமல் அப்படியே கிடப்பில் போட்டுள்ளனர்.இதனால், இரவு நேரத்தில் லாரி பார்க்கிங் பகுதியில் போதுமான வெளிச்சம் இல்லாததால், இரவில் துாங்கும் கனரக வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து அமைக்கப்பட்ட உயர் கோபுர மின் விளக்கு, உபயோகமின்றி வீணாகி வருகிறது.உயர் கோபுர மின் விளக்கை சீரமைக்க, சம்பந்தப்பட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.