மறைமலை நகர் சிப்காட் சாலையில் பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி
மறைமலை நகர்:மறைமலை நகர் சிப்காட் பகுதியில், 200க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு, காமராஜர் சாலை, பெரியார் சாலை, முத்துராமலிங்கதேவர் சாலை மற்றும் அதனை இணைக்கும் முக்கிய சாலைகள் உள்ளன.இந்த சாலையின் பல இடங்களில் பள்ளம் ஏற்பட்டு, குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதன் காரணமாக, வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.இதுகுறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:சிப்காட் பகுதி முக்கிய சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால், சரக்கு வாகன ஓட்டிகள், இருசக்கர வாகன ஓட்டிகள், இந்த பகுதியில் வாகனங்களை இயக்குவது சவாலாக உள்ளது.மழை பெய்யும் போது, பள்ளங்களில் தண்ணீர் தேங்குவதால், வாகனங்கள் செல்லும் போது, பாதசாரிகள் மீது தண்ணீரை வாரி இரைத்து செல்கின்றன.இதனால், வேலைக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மேலும், ஜல்லிக்கற்கள் சாலையில் பரவி கிடப்பதால், பலர் தடுமாறி கீழே விழுகின்றனர். எனவே, இந்த சாலைகளில் உள்ள பள்ளத்தை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.