செங்கையில் போக்குவரத்து மாற்றம் நெரிசலில் வாகன ஓட்டிகள் அவதி
செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகரில், கவர்னர் வருகைக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். செங்கல்பட்டு நகரில், 30க்கும் மேற்பட்ட பள்ளிகள், அரசு கலைக் கல்லுாரி, தனியார் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, அரசு மருத்துவ கல்லுாரி, சட்ட கல்லுாரி உள்ளிட்டவை உள்ளன. மேலும், சுற்றியுள்ள நுாற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர், தங்களின் அடிப்படை தேவைகளுக்கு செங்கல்பட்டு வந்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று காலை, தமிழக கவர்னர் ரவி திருவண்ணாமலை சென்றதால், புறவழிச்சாலையில் திண்டுக்கல் மார்க்கத்தில் சென்ற வாகனங்கள் அனைத்தும், செங்கல்பட்டு நகருக்குள் திருப்பி விடப்பட்டன. இதனால், செங்கல்பட்டு நகரின் உள்ளே செல்லும் பழைய ஜி.எஸ்.டி., சாலையில், நேற்று காலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பள்ளி குழந்தைகள், அலுவலகத்திற்கு செல்வோர் என, பல தரப்பினரும் கடும் அவதியடைந்தனர். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செங்கல்பட்டு நகருக்குள் சென்றதால், நெரிசலில் சிக்கிய வாகன ஓட்டிகள், ஒரு மணி நேரத்திற்கும் சாலையில் காத்திருந்து அவதிப்பட்டனர். சாலை சந்திப்புகளில், போலீசார் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.