ஆக்கிரமிப்பு கடைகள் இடிப்பு விவகாரம் அமைச்சரிடம் நகராட்சி து.தலைவர் மனு
கூடுவாஞ்சேரி:நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி, நந்திவரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன் இளநீர், காய்கறிகள், பழ வகைகள், பூக்கடைகள் வைத்து விற்பனையில் ஈடுபட்ட, 25க்கும் மேற்பட்ட நடைபாதை கடைகள் இருந்தன.இந்த கடைகளால் மருத்துவமனை வருவோருக்கும், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கும், பேருந்து பயணியருக்கும் இடையூறு மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக, குற்றச்சாட்டு எழுந்தது.இதையடுத்து, நெடுஞ்சாலை துறை, போக்கு வரத்து துறை மற்றும் நகராட்சி துறை அதிகாரிகள் இணைந்து, 25 நடைபாதை கடைகளை சில நாட்களுக்கு முன் அகற்றினர்.நேற்று முன்தினம் ஆக்கிரமித்து கடைகள் வைத்திருந்தோர், நகராட்சி துணைத் தலைவர் லோகநாதனை முற்றுகையிட்டு, தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், இந்த வியாபாரத்தை நம்பி கடன்கள் பெற்றுள்ளதாகவும் கூறினர்.மேலும், நகராட்சி சார்பில் எங்களுக்கு நடைபாதை வியாபாரிகள் அடையாள அட்டை மற்றும் 20,000 முதல் 1 லட்சம் வரை வங்கி கடன் கொடுத்துள்ளனர். தற்போது, அதை செலுத்த முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.இதுகுறித்து, நகராட்சி துணைத் தலைவர், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் அன்பரசனுக்கு மனு வழங்கியுள்ளார்.அதில், அவர் தெரிவித்து இருப்பதாவது:நந்திவரம் அரசு மருத்துவமனை முன் நடைபாதை கடைகள் அமைத்து, 33 ஆண்டுகளுக்கு மேலாக, நந்திவரத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் வியாபாரம் செய்து வருகின்றனர்.இந்நிலையில், ஒட்டுமொத்த நடைபாதை கடைகளும் அகற்றப்பட்டதால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, அவர்களுக்கு மாற்று ஏற்பாடாக, பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வகையில் இடம் ஒதுக்கி வியாபாரம் செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.இதை பெற்றுக் கொண்ட அமைச்சர் அன்பரசன், நடைபாதை வியாபாரிகளுக்கு உதவி செய்வதாக தெரிவித்துள்ளார்.