நகராட்சியானது மாமல்லபுரம் தரம் உயர்த்தி அரசாணை வெளியீடு
மாமல்லபுரம்:மாமல்லபுரம் பேரூராட்சியை, நகராட்சியாக தரம் உயர்த்தி, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.தமிழகத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி ஆகிய உள்ளாட்சி நிர்வாகங்கள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் நிர்வகிக்கப்படுகின்றன. மாநிலத்தின் பல்வேறு பேரூராட்சி பகுதிகளில், மக்கள் தொகை அதிகரித்துள்ளது. நிர்வாக ஆண்டு வருவாயும் உயர்ந்துள்ளது. இத்தகைய காரணங்களால், வளர்ச்சியடைந்த பேரூராட்சி பகுதிகளை நகராட்சியாக தரம் உயர்த்த, தமிழக அரசு முடிவெடுத்தது.அதன் அடிப்படையில், சுற்றுலா பகுதியான மாமல்லபுரம் சிறப்புநிலை பேரூராட்சி பகுதியின் பரப்பு, மக்கள் தொகை, மூன்றாண்டு சராசரி ஆண்டு வருவாய் ஆகிய விபரங்களை, கடந்த ஆண்டு அரசு பெற்றது.அதைத்தொடர்ந்து, நகராட்சியாக தரம் உயர்த்துவது குறித்து, பேரூராட்சி மன்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆண்டு சராசரி வருவாய் ஆறு கோடி ரூபாய்க்கு மிகாத நிலையில், இரண்டாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்துவது குறித்து, கடந்த ஆண்டு ஆகஸ்டில், உத்தேச அரசாணை வெளியிட்டு, அரசிதழில் வெளியிடப்பட்டது.அதற்கான முறையான அரசாணை எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது நகராட்சியாக தரம் உயர்த்தி, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.நகராட்சிப் பகுதியின் மக்கள் தொகை 30,000மாக இருக்க வேண்டும். இங்கு 20,000 பேருக்கும் குறைவு. ஆண்டு நிர்வாகத்தின் சராசரி ஆண்டு வருமானம் மூன்று கோடி ரூபாய், சுற்றுலா பகுதி மேம்பாட்டு முக்கியத்துவம் ஆகியவை கருதி, நகராட்சியாக தரம் உயர்த்துவதாக, உத்தேச அரசாணையின் போது அரசு தெரிவித்தது. கூடுதல் மக்கள்தொகை கருதி, அருகிலுள்ள ஊராட்சிப் பகுதிகள், மாமல்லபுரத்துடன் இணைக்கப்படும் எனத் தெரிகிறது.தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு, காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய பேரூராட்சி பகுதிகளும், இரண்டாம் நிலை நகராட்சி நிர்வாகமாக உயர்த்தப்பட்டுள்ளன.