உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / நெம்மேலி கடலரிப்பை தடுக்க கடற்கரையில் கல்தடுப்பு அமைப்பு

நெம்மேலி கடலரிப்பை தடுக்க கடற்கரையில் கல்தடுப்பு அமைப்பு

மாமல்லபுரம்:: நெம்மேலியில் கடலரிப்பை தடுக்க, கடற்கரையில் கற்களால் தடுப்பு அமைக்கப்பட்டது.மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி ஊராட்சியில், மீனவர் பகுதி உள்ளது. இங்கு வசிக்கும் மீனவர்கள் வாழ்வாதார தொழிலாக, கடலில் மீன் பிடித்து விற்கின்றனர்.இப்பகுதியில், கடந்த 35 ஆண்டுகளுக்கு முன், கடலரிப்பு பாதிப்பு இல்லை. சுனாமி அலை தாக்குதலுக்குப் பின், கடலரிப்பு ஏற்பட துவங்கியது. நெம்மேலி கடல்நீரில் குடிநீர் உற்பத்தி செய்யும் ஆலைகள் அமைவிட பகுதிகளில் கடலரிப்பை தடுக்க, கடற்பகுதியில் பாறைக் கற்கள் குவிக்கப்பட்டன. சூலேரிக்காடு மீனவ பகுதியில் கடலரிப்பை தவிர்க்க, நேர்கல் தடுப்பு அமைக்கப்பட்டது.இவற்றின் தாக்கம் காரணமாக, நெம்மேலி மீனவ பகுதியில், கடல்நீர் படிப்படியாக நிலத்தில் புகுவது அதிகரித்தது.இதனால், மீன்பிடி படகுகள் மற்றும் வலைகளை பாதுகாப்பாக வைக்க, கடற்கரை மணற்பரப்பு இல்லாமல் மீனவர்கள் தவித்தனர். மீனவர்களின் வீடுகள் கடற்கரையிலிருந்து, 164 அடி துாரத்தில் உள்ள நிலையில், வீடுகளை கடல் சூழும் அபாயம் ஏற்பட்டது.இப்பகுதியில் 25 கோடி ரூபாய் மதிப்பில் நேர்கல் தடுப்பு, மீன் இறங்கு தளம் ஆகியவை அமைக்க, கடந்தாண்டு சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. ஆனால், பசுமை தீர்ப்பாயம் வழக்கு சிக்கல் காரணமாக, திட்டம் முடங்கியது. திட்டத்தை விரைந்து செயல்படுத்த வலியுறுத்தி, மீனவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.கடல்நீரிலிருந்து, ஒரு நாளில் 45 கோடி லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யும் பேரூர் ஆலை, இப்பகுதியை ஒட்டியே அமைகிறது. தற்போது கடலரிப்பு அதிகரிக்கும் நிலையில், புதிய ஆலை பகுதி கடலரிப்பை தடுக்க, கடற்கரையில் கிழக்கு மேற்காக, பல வரிசைகளில் பாறைக் கற்கள் குவித்து, ஆலை நிர்வாகம் தடுப்பு அமைக்கிறது. மீனவ பகுதியை ஒருங்கிணைத்தே, இத்தடுப்பு அமைக்கப்படுகிறது. இந்நிலையில், ஆலையை அமைக்கும் நிறுவனத்திடம் வலியுறுத்தி, தங்கள் பகுதிக்கும் தடுப்பு அமைக்கப்பட்டதாக மீனவர்கள் கூறியுள்ளனர். மேலும், ஏற்கனவே அரிக்கப்பட்ட பகுதியில், ஆலை வளாக பகுதியில் தோண்டியெடுத்த மணலை நிரப்பி மேடு ஏற்படுத்தியதாகவும், மீனவர்கள் தெரிவித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி