உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மெல்லிய அலகு கடற்காக்கை பள்ளிக்கரணைக்கு புதுவரவு

மெல்லிய அலகு கடற்காக்கை பள்ளிக்கரணைக்கு புதுவரவு

சென்னை,பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு, முதல் முறையாக மெல்லிய அலகு கடற்காக்கை வந்துள்ளது, கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.ஆண்டுதோறும் அக்., முதல் மார்ச் வரை, பறவைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வருவது வழக்கம். அந்த வகையில், கடலோர பகுதிகளில் காணப்படும் அரிய வகை பறவைகள் வருகை, சமீப காலமாக அதிகரித்துள்ளது.இதில், வட கோளத்தில் இருந்து இந்திய பெருங்கடல் நோக்கி வரும் மெல்லிய அலகு கடற்காக்கை, அரிதாக தமிழகத்துக்கு வரும்.தமிழகத்தில், திருநெல்வேலி மாவட்டம், கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்துக்கு வருகை தரும் இப்பறவைகள், சென்னையை ஒட்டிய பகுதிகளில் அரிதாக காட்சிதரும்.இந்நிலையில், கிழக்கு கடற்கரை சாலை, நெம்மேலி மற்றும் அதை சுற்றியுள்ள நீர்நிலைகளில், 200 மெல்லிய அலகு கடற்காக்கைகள் இருந்தது, கடந்த மாதம் தெரியவந்தது.இதையடுத்து, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில், வனத்துறையுடன் இணைந்து, 'தி நேச் சர் டிரஸ்ட்' அமைப்பினர், பறவைகள் கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளனர்.இது குறித்து, அந்த அமைப்பின் உறுப்பினர் ஆர்.நாராயணன் கூறியதாவது:இங்கு, சில நாட்களுக்கு முன், ஒரு மெல்லிய அலகு கடற்காக்கை இருந்தது, புகைப்பட ஆதாரத்துடன் பதிவு செய்யப்பட்டது.கடந்த 14 ஆண்டுகளாக, இங்கு நடக்கும் பறவைகள் கணக்கெடுப்பில், தற்போது தான் முதல் முறையாக மெல்லிய அலகு கடற்காக்கை இருப்பது பதிவு செய்யப்படுகிறது.இதன் நடமாட்டம் குறித்த கூடுதல் விபரங்களை திரட்டி வருகிறோம். மேலும், சில மெல்லிய அலகு கடற்காக்கைகள் இருக்கின்றனவா என்பதுகுறித்தும், தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை