உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சிங்கபெருமாள் கோவிலில் புதிய காவல் நிலையம் திறப்பு

சிங்கபெருமாள் கோவிலில் புதிய காவல் நிலையம் திறப்பு

சிங்கபெருமாள் கோவில்: சிங்கபெருமாள் கோவிலில், நீண்ட இழுபறிகளுக்குப் பின், புதிதாக காவல் நிலையம் திறக்கப்பட்டது. காட்டாங்கொளத்துார் ஒன்றியம், சிங்க பெருமாள் கோவில் ஊராட்சியில், 20,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், வணிக கட்டடங்கள் உள்ளன. சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள், தங்களின் அடிப்படை தேவைகளுக்கு தினமும் இங்கு வந்து செல்கின்றனர். இந்த பகுதி மக்கள், குற்றம் மற்றும் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளுக்கு, 7 கி.மீ., தொலைவில் உள்ள மறைமலை நகர் காவல் நிலையத்தில் சென்று புகார் அளிக்கும் நிலை இருந்து வந்தது. எனவே, மறைமலை நகர் காவல் நிலையத்தை பிரித்து, இந்த பகுதியில் புதிதாக காவல் நிலையம் அமைக்க வேண்டும் என, பொது மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் நீண்ட நாட்களாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, 2023 மார்ச் 24ம் தேதி, புதிய காவல் நிலையம் அமைக்க முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார். இந்த உத்தரவு வெளியாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்தும், காவல் நிலையம் திறக்கப்படாமல் இருந்தது. இது குறித்து நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, தற்காலிகமாக காவல் நிலையம் அமைக்க, சிங்கபெருமாள் கோவில் -- திருக்கச்சூர் சாலையில் உள்ள மகளிர் சுய உதவிக்குழு கட்டடம், போலீசார் தரப்பில் தேர்வு செய்யப்பட்டது. கடந்த இரண்டு மாதங்களாக இந்த கட்டடம் புதுப்பிக்கப்பட்ட நிலையில், நேற்று இந்த காவல் நிலையத்தின் திறப்பு விழா நடந்தது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் அன்பரசன், காவல் நிலையத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், செங்கல்பட்டு கலெக்டர் சினேகா, தாம்பரம் போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோதக், செங்கல்பட்டு தி.மு.க., - எம்.எல்.ஏ., வரலட்சுமி, சிங்கபெருமாள் கோவில் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரவி, போலீசார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை