உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சிங்கபெருமாள் கோவில் புது காவல் நிலைய பணி... மந்தம்:குற்ற சம்பவங்கள் அதிகரிப்பால் மக்கள் அதிருப்தி

சிங்கபெருமாள் கோவில் புது காவல் நிலைய பணி... மந்தம்:குற்ற சம்பவங்கள் அதிகரிப்பால் மக்கள் அதிருப்தி

சிங்கபெருமாள் கோவில்:குற்ற சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், சிங்கபெருமாள் கோவிலில் புதிதாக காவல் நிலையம் திறக்கும் பணி, மிகவும் மந்தமாக நடைபெற்று வருவதால், இப்பகுதி மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். காட்டாங்கொளத்துார் ஒன்றியம், சிங்கபெருமாள் கோவில் ஊராட்சியின் கீழ், சிங்கபெருமாள் கோவில், திருத்தேரி, பாரேரி, விஞ்சியம்பாக்கம் கிராமங்கள் உள்ளன. சிங்கபெருமாள் கோவிலில் மட்டும், 20,000க்கும் மேற்பட்ட வீடுகள், வணிக கட்டடங்கள் உள்ளன. சுற்றியுள்ள, 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள், தங்களின் அடிப்படை தேவைகளுக்காக, தினமும் இங்கு வந்து செல்கின்றனர். ஒரகடம், மகேந்திரா சிட்டி, மறைமலை நகர் சிப்காட்டில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும், மற்ற மாவட்டங்களை சேர்ந்த பலர், இங்கு வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். இப்பகுதி மக்கள், குற்ற சம்பவங்கள் குறித்து புகார் அளிக்க, 7 கி.மீ., தொலைவில் உள்ள மறைமலை நகர் காவல் நிலையத்திற்கு தான் செல்ல வேண்டியுள்ளது. கடந்த சில ஆண்டுகளில், சிங்கபெருமாள் கோவிலில், அரசியல் கட்சி பிரமுகர்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். இருசக்கர வாகனங்கள், மொபைல் போன் திருட்டு மற்றும் வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களும், சிங்கபெருமாள் கோவில் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அடிக்கடி நடக்கின்றன. எனவே, மறைமலை நகர் காவல் நிலையத்தை பிரித்து, சிங்கபெருமாள் கோவிலில் புதிதாக காவல் நிலையம் அமைக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, 2023 மார்ச் 24ம் தேதி, 'சிங்கபெருமாள் கோவிலில் புதிதாக காவல் நிலையம் அமைக்கப்படும்' என, முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார். இந்த உத்தரவு வெளியாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், காவல் நிலையம் அமைக்க இடம் தேர்வு மற்றும் எல்லைகள் பிரிப்பது தொடர்பாக, தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வந்தது. இறுதியாக, சிங்கபெருமாள் கோவில் காவல் நிலையம் தற்காலிகமாக செயல்பட, சத்யா நகர் பகுதியிலுள்ள அரசு மகளிர் விடுதி கட்டடம், திருக்கச்சூர் சாலையிலுள்ள மகளிர் சுய உதவிக்குழு கட்டடம் உள்ளிட்ட கட்டடங்கள், போலீசார் தரப்பில் தேர்வு செய்யப்பட்டு, மாவட்ட நிர்வாகத்திடம் பரிந்துரை செய்யப்பட்டது. மேற்கண்ட இடங்களை ஆய்வு செய்த வருவாய்த் துறை அதிகாரிகள், திருக்கச்சூர் சாலையிலுள்ள மகளிர் சுய உதவிக்குழு கட்டடத்தை தேர்வு செய்துள்ளனர். ஆனாலும், கட்டடத்தை புனரமைத்து, வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பணிகள் மந்தமாக நடைபெற்று வருவதால், புதிய காவல் நிலையத்தை, கடந்த 15ம் தேதி துவக்க அதிகாரிகள் திட்டமிட்டிருந்தும், அது நடைபெறவில்லை. புனரமைப்பு பணிகள் மிகவும் மந்தமாக நடைபெற்று வருவதால், இப்பகுதி மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதுகுறித்து, போலீசார் கூறியதாவது: சிங்கபெருமாள் கோவில் காவல் நிலையம் புதிதாக திறக்கப்பட்டாலும், பழைய வழக்குகள் தொடர்பான ஆவணங்களைப் பிரிப்பது, வழக்குகளுக்கு எப்.ஐ.ஆர்., எனும் முதல் தகவல் அறிக்கை தனியாக பதிவு செய்ய, சில மாதங்களாகும். அதுவரை மறைமலை நகர் காவல் நிலையத்துடன் இணைந்தே செயல்படும் சூழல் உள்ளது. சிங்கபெருமாள் கோவில் காவல் நிலையத்திற்கு முதற்கட்டமாக ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு சப் -- இன்ஸ்பெக்டர் மற்றும் ஆறு போலீசார், தற்போது நியமிக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

எந்தெந்த

கிராமங்கள்?

புதிய காவல் நிலையம் துவக்கப்பட்டதும், சிங்கபெருமாள் கோவில், விஞ்சியம்பாக்கம், திருத்தேரி, பாரேரி, சத்யா நகர், செட்டி புண்ணியம், திருக்கச்சூர், கருநிலம், மெல்ரோசாபுரம், கச்சேரி மங்கலம், கொண்டமங்கலம், தர்காஸ் உள்ளிட்ட கிராமங்கள், அதன் கட்டுப்பாட்டில் வரவுள்ளன.

தினமும் 10 புகார்கள்

மறைமலை நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், 2022ல் ஐந்து கொலைகள், 2023ல் ஏழு, 2024ல் ஒன்று, இந்தாண்டு மே மாதம் இரட்டை கொலை உட்பட மூன்று கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. மறைமலை நகர் காவல் நிலையத்திற்கு, மொபைல் போன் திருட்டு, பைக் திருட்டு, குடும்ப பிரச்னை, திருட்டு, தற்கொலை என, தினமும் 8 முதல் 10 புகார்கள் வரை வருகின்றன. குறிப்பாக கடந்த நான்கு மாதங்களில், திருக்கச்சூர், வி.ஐ.பி., நகர் பகுதிகளில், இரண்டு வீடுகளில், 50 சவரன் தங்க நகைகளும், கடந்த 31ம் தேதி சிங்கபெருமாள் கோவிலில் ஒரு வீட்டில், 120 சவரன் தங்க நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டன. சிங்கபெருமாள் கோவிலில், 120 சவரன் திருடியோரை, தனிப்படை போலீசார் கைது செய்தனர். மற்ற சம்பவங்களில், தொடர்ந்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

எல்லை பிரச்னையால் குழப்பம்

சிங்கபெருமாள் கோவில் -- அனுமந்தபுரம் சாலை, 9 கி.மீ., நீளம் உடையது. இந்த பகுதியில், ஒரே ஊராட்சியில் உள்ள கிராமங்கள் இரண்டு காவல் நிலைய எல்லையில் உள்ளதால், மக்கள் புகார் அளிப்பதிலும், போலீசார் ரோந்து செல்வதிலும் குழப்பம் ஏற்படுகிறது. குறிப்பாக தென்மேல்பாக்கம் ஊராட்சியில், தென்மேல்பாக்கம் செங்கல்பட்டு தாலுகா காவல் நிலைய எல்லையிலும், கச்சேரிமங்கலம் மறைமலை நகர் காவல் நிலைய எல்லையிலும் உள்ளன. அனுமந்தபுரம் ஊராட்சியில் அனுமந்தபுரம், தர்காஸ் போன்றவை மறைமலை நகர் காவல் நிலைய எல்லையிலும், தாசரிகுப்பம் கிராமம் செங்கல்பட்டு தாலுகா காவல் நிலைய எல்லையிலும் உள்ளதால், பல ஆண்டுகளாக குழப்பம் நீடிக்கிறது. மேலும், சாலை விபத்துகளில் உயிரிழப்பு ஏற்படும் போது, எந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்துவது என்ற சிக்கலும் ஏற்படுகிறது. கடந்த வாரம் நடந்த ஒரு விபத்தில், முதியவர் உடலை யார் மீட்டு விசாரிப்பது என, போலீசாருக்குள் பிரச்னை வந்த போது, சம்பந்தப்பட்ட இடத்திற்கு மூன்று எல்லையைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் வந்து ஆய்வு செய்து, எல்லையை கண்டுபிடித்து கூறியது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை