செயல்படாத நியாய விலைக் கடை அடையாளச்சேரி கிராமத்தினர் அவதி
கூவத்துார், அடையாளச்சேரி ஊராட்சியில், நியாய விலைக் கடை செயல்படாததால், பகுதிவாசிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.கூவத்துார் அடுத்த அடையாளச்சேரி ஊராட்சியில், 2010ம் ஆண்டு சமத்துவபுரம் அமைக்கப்பட்டு, பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த 100 குடும்பத்தினருக்கு வீடுகள் வழங்கப்பட்டன.தற்போது, 350க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். சமத்துவபுரத்தில் நியாய விலைக் கடை அமைக்கப்பட்டு, செயல்படாமல் உள்ளது.சமத்துவபுரம் துவங்கப்பட்ட நாளில் இருந்து, தற்போது வரை இந்த நியாய விலைக் கடை செயல்படாமல் உள்ளதால், அப்பகுதி மக்கள் அடையாளச்சேரி மற்றும் குண்டுமணிச்சேரி பகுதியில் உள்ள நியாய விலை கடைக்கு சென்று, உணவுப் பொருட்கள் வாங்கி வருகின்றனர்.இந்த கடை நீண்ட துாரத்தில் உள்ளதால், உணவுப் பொருட்களை வாங்கி, அங்கிருந்து கொண்டு வர பெண்கள் மற்றும் முதியவர்கள் சிரமப்படுகின்றனர்.எனவே, பொது விநியோக திட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, சமத்துவபுரத்தில் உள்ள நியாய விலைக் கடை கட்டடத்தை சீரமைத்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.