கூவத்துார்:கூவத்துார் அடுத்த பழைய நடுக்குப்பம் மற்றும் புது நடுகுப்பம் மீனவ கிராம மக்கள், மீன் இறங்குதளம் அமைக்கக்கோரி, பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர்.இந்நிலையில், மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில், கடந்த ஆண்டு, இரண்டு இடங்களில் மீன் இறகுதளம் அமைக்க முடிவு செய்து, கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டன.கட்டுமானப் பணிகள் முடிவடைந்த நிலையில், நேற்று தமிழக முதல்வர் ஸ்டாலின், அவற்றை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.விழாவில், வருவாய் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.கோவளம்: திருப்போரூர் அடுத்த கோவளத்தில், மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மீன் இறங்குதளம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.அதையடுத்து, கோவளம் கிழக்கு பகுதியில், நபார்டு வங்கி நிதி உதவியுடன், 3 கோடி ரூபாய் மதிப்பில், மீன் இறங்குதளம் மேம்படுத்தும் பணி திட்டத்தின் கீழ், வலை பின்னும் கூடம், மீன் உலர்களம், உட்புற சாலை ஆகிய திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.இதற்கான திறப்பு விழா, நேற்று நடந்தது. சென்னை தலைமை செயலகத்திலிருந்து, முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.கோவளத்தில் நடந்த விழாவில், திருப்போரூர் வி.சி., - எம்.எல்.ஏ., பாலாஜி, ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.